

சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அரசியல் தலைவர்கள், ‘அவர் மனதில் பட்டதைப் பேசும் துணிச்சல்மிக்க அரசியல்வாதி; என தெரிவித் துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருமான ஈவிகேஎஸ். இளங்கோவன் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி: ஈரோடு கிழக்கு எம்எல்ஏ இளங்கோவனின் மறைவால் ஆழ்ந்த துயரம் அடைந்தேன். சமூகத்துக்காகவும், மக்கள் நலனுக்காகவும் அவர் ஆற்றிய பங்களிப்புகள் என்றென்றும் நினைவுகூரப்படும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: பெரியார், ஈவிகே.சம்பத் என மிகப் பெரும் அரசியல் பாரம்பரிய மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன். தமிழக காங்கிரஸ் தலைவர், எம்எல்ஏ, எம்.பி, மத்திய அமைச்சர் என பல்வேறு நிலைகளில் திறம்பட பணியாற்றியவர். எப்போதும் தன் மனதில் பட்டதைப் பேசிவிடக் கூடிய பண்புக்குச் சொந்தக்காரர். அவர் மறைவுற்ற செய்தி தனிப்பட்ட முறையில் வேதனையை ஏற்படுத்துகிறது.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்: சிறு வயதிலிருந்தே அரசியல் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர், ஈவிகேஎஸ்.இளங்கோவன். அவர் காலமான செய்தி வருத்தமளிக்கிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: தனித்துவமிக்க இயக்கமாக காங்கிரஸ் கட்சியை மாற்றிய பெருமை ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு உண்டு. அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது. தமிழக காங்கிரஸின் ஒரு தூண் சாய்ந்து விட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவனின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் உடல்நலக்குறைவால் காலமான செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: இளங்கோவன், தன்னுடைய கருத்தை துணிச்சலாக தெரிவிக்கும் ஆற்றல் படைத்தவர். அவருடைய இழப்பு காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பு.
திக தலைவர் வீரமணி: குழப்பமில்லாத கொள்கை வீரர் இளங்கோவனின் மறைவு தமிழக பொது வாழ்வுக்கே ஏற்பட்ட பேரிழப்பு.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வலிமைப்படுத்த அஞ்சாமல் கருத்துகளை முன்வைத்தவரின் மறைவு துயரத்தைத் தருகிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ்: நீண்ட பாரம்பரியம் கொண்ட அரசியல் குடும்பத்திலிருந்து வந்து மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் தமிழக காங்கிரஸை வலுப்படுத்தியவர்.
விசிக தலைவர் திருமாவளவன்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசக்கூடியவர். ஈவிகேஎஸ்.இளங்கோவனின் மறைவு பேரிழப்பு.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு இளங்கோவன் நல்ல நண்பர். அவரது மறைவு செய்தி வேதனை தருகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: காமராஜர், கவிஞர் கண்ணதாசன், பழ.நெடுமாறன், குமரிஅனந்தன் போன்ற தலைவர்களின் பாசத்தை பெற்ற இளங்கோவனின் மறைவு பேரிழப்பாகும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: அரசியல் நிலைப்பாடுகளில் தனது கருத்துகளை பளிச்சென்று பேசும் துணிச்சல் மிக்க அரசியல்வாதியான இளங்கோவனின் மறைவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: மனதில் பட்டதை தைரியமாக பேசும் இளங்கோவனின் மறைவு பேரிழப்பாகும்.
மநீம கட்சிதலைவர் கமல்ஹாசன்: இளங்கோவன் காலமான செய்தி மனதைத் தாக்குகிறது. பெரும் பாரம்பரியமுள்ள காங்கிரஸ் பேரியக்கத்தின் தூணாக இருந்தவர் சாய்ந்துவிட்டார். காங்கிரஸ் அன்பர்களுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் ஆறுதல் களை தெரிவிக்க விழைகிறேன்.
தவெக தலைவர் விஜய்: மிகப்பெரிய அரசியல் பாரம்பரியத்தைக் கொண்ட ஈவிகேஎஸ். இளங்கோவன், காலமான செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன். குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மறைவு செய்தியறிந்து துயர மடைந்தேன். குடும்பத்தினருக்கு இரங்கல்கள்.
இவர்களுடன் பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, முன்னாள் எம்.பி. சு.திருநாவுக்கரசர், கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழருவி மணியன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.