

திருநெல்வேலி/தென்காசி/ தூத்துக்குடி: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று 3-வது நாளாக மழை பெய்தது. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்த துடன், பல இடங்களில் பாலங்கள் நீரில் மூழ்கின.
நெல்லை மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை தொடங்கிய கனமழை நேற்றும் நீடித்தது. மாவட்டம் முழுவதும் நேற்று காலை வரை 1,377.80 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 7,813 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு 3,485 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணைகளில் இருந்து 2,400 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.
தாமிரபரணி ஆற்றில் பாயும் தண்ணீருடன், தென்காசி மாவட்டம் கடனா, ராமநதி ஆற்று வெள்ளம் சேர்வதாலும், காட்டாற்று வெள்ளத்தாலும் தாமிரபரணி ஆற்றில் நேற்று காலை 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் சென்றதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கருப்பந்துறை, சீவலப்பேரியில் ஆற்றுப் பாலங்கள் மூழ்கின. முன்னெச்சரிக்கையாக தாழ்வான பகுதிகளில் வசித்தவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். பல்வேறு இடங்களில் மழை நீர் கடைகளுக்குள் புகுந்தது. மீட்புப் பணிகளை சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு, அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் நேற்று 2-வது நாளாக பார்வையிட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினர்.
தென்காசி மாவட்டத்தில் நேற்றும் மிதமான மழை தொடர்ந்தது. குண்டாறு, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி அணைகள் நிரம்பி உள்ளன. 10 குடிசை வீடுகள் முழுமையாக சேதமடைந்தன.
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. பிரதான அருவி அருகே நேற்று 3 வயதுள்ள ஆண் யானைக் குட்டி உயிரிழந்து கிடந்தது. சிற்றாறு கால்வாயில் பெருக்கெடுத்த தண்ணீர் புகுந்ததில், துவரங்காடு கிராமத்தில் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
கருப்பாநதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், பெரியநாயகம் அய்யனார் கோயிலில் சிக்கித் தவித்த 38 பக்தர்களை தீயணைப்புப் படையினர் மீட்டனர். வெள்ள பாதிப்புகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றும் மிதமான மழை பெய்தது. தாமிரபரணி வெள்ளப் பெருக்கால் முக்காணியில் உள்ள தரைமட்டப் பாலத்தில் நேற்று 2-வது நாளாக 3 அடி உயரத்துக்கு தண்ணீர் சென்றது. தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடமான புன்னக்காயல் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சில தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் வீடுகளில் சிக்கியுள்ளனர். குமரி மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்து மிதமான மழை பெய்தது.
தலைவர்கள் வலியுறுத்தல்: தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.