

சின்னமனூர்: தொடர் மழையினால் தேனி மாவட்ட மலைச்சாலைகளில் மண், மரம், பாறைகள் சரிந்து விழுந்து வருகின்றன. இதற்காக இப்பகுதிகள் 24 மணி நேர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மலையடிவாரத்தில் சீரமைப்பு கருவிகளுடன், களப்பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர்.
மலைச்சாலைகள் நிறைந்த மாவட்டமாக தேனி உள்ளது. குறிப்பாக கேரள மாநிலத்துக்குச் செல்ல போடிமெட்டு, கம்பம்மெட்டு, குமுளி ஆகிய வனச்சாலைகளும், சுற்றுலா பகுதியான மேகமலை, கொடைக்கானல் பகுதிக்குச் செல்ல அடுக்கம் உள்ளிட்ட மலைச் சாலைகளும் உள்ளன. மழை காலங்களில் இப்பகுதிகளில் மண், மரம் மற்றும் பாறை சரிவுகள் தவிர்க்க முடியாததாக இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனைத்தொடர்ந்து கம்பம் மெட்டு 17-வது கொண்டை ஊசி வளைவு அருகே மண், மரம் சரிந்தது. இதே போல் மேகமலை 16-வது கொண்டை ஊசி வளைவு அருகே மண், மரம் சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உத்தமபாளையம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் சார்பில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன.
மண் அள்ளும் இயந்திரம் மூலம் மண் அகற்றப்பட்டன. விழுந்து கிடந்த மரங்களும் வெட்டப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் உதவி கோட்ட பொறியாளர் ராஜா, உதவிப் பொறியாளர் வயிரக்குமார் தலைமையிலான சாலை ஆய்வாளர் கனகராஜ், சாலைப்பணியாளர்கள் குமார், முருகன் உள்ளிட்ட களப்பணியாளர்கள் பலரும் அப்பகுதியிலே முகாமிட்டுள்ளனர்.
சீரமைப்பு கருவிகள் மற்றும் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், மழை நேரங்களில் வனச்சாலையில் மண் சரிவு தவிர்க்க முடியாததாக உள்ளது. இருப்பினும் பாதிப்பு ஏற்பட்டால் உடன் சரி செய்ய 24 மணி நேரமும் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். இதற்காக வனச்சாலைகளின் அடிவாரத்தில் மண் அள்ளும் இயந்திரம், மரம் வெட்டும் கருவிகள், கயறு, மணல்மூட்டைகள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வனச்சாலையில் எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் உடன் சென்று சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றனர்.