

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு தலைவர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் (76) சென்னையில் சனிக்கிழமை காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி காலை 10.20 மணிக்கு உயிரிழந்தார். ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு செய்தி அறிந்ததும் தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை மற்றும் கட்சி நிர்வாகிகள் மியாட் மருத்துவமனைக்கு விரைந்தனர். கட்சித் தொண்டர்களும், மக்களும் திரண்டனர். இளங்கோவன் மறைவு செய்தியறிந்து தொண்டர்கள் மிகுந்த வேதனையடைந்தனர்.
மருத்துவமனையில் இருந்து மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்துக்கு ஈவிகேஎஸ்.இளங்கோவன் உடல் எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், எம்.பி. தயாநிதி மாறன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.வி.தங்கபாலு, சு.திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீன், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு, அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சடங்கு: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்ட அறிக்கையில், “ஈவிகேஎஸ். இளங்கோவன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஒரு வாரம் துக்கம் அனுசரிப்பதோடு, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். நாளை (டிச.15) மாலை சுமார் 4.00 மணியளவில் முகலிவாக்கம் எல் அண்ட் டி காலனி பகுதியில் அமைந்துள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
கார்கே, ராகுல் காந்தி புகழஞ்சலி: “ஒரு நேர்மையான மற்றும் தைரியம் மிக்க தலைவராக ஒருமித்த கருத்துகளை உருவாக்குபவராக அவர் இருந்தார். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மற்றும் தந்தை பெரியாரின் முற்போக்கான கொள்கைகளை நிலைநிறுத்துவதற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர்” என்று இளங்கோவன் மறைவுக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
“துணிச்சலான, கொள்கைப் பிடிப்புள்ள தலைவராக இருந்த இளங்கோவன், காங்கிரஸ் கட்சியின் மதிப்புகள் மற்றும் தந்தை பெரியாரின் கொள்கைகளுக்கான உறுதியான ஆதரவாளராக இருந்தார். தமிழக மக்களுக்கு அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு மிக்க சேவைகள் என்றென்றும் உத்வேகம் அளிக்கும்” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
தலைவர்கள் புகழஞ்சலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “தந்தை பெரியார், சொல்லின் செல்வர் ஈவிகே சம்பத் என மிகப் பெரும் அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்த நண்பர் இளங்கோவன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய அமைச்சர் என்று பல்வேறு நிலைகளில் பொது வாழ்க்கைப் பணிகளைத் திறம்பட ஆற்றியவர். எப்போதும் தன் மனதில் பட்டதைப் பேசிவிடக் கூடிய பண்புக்குச் சொந்தக்காரர்.
அவரது அன்பு மகனும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான திருமகன் ஈவெரா இழந்ததில் இருந்தே நண்பர் இளங்கோவன் மனதளவில் மிகவும் உடைந்து போயிருந்தார். எனினும், இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று, தன் கவலைகளை மீறி மக்கள் பணியாற்றி வந்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இளவங்கோவனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இரா. முத்தரசன், “மத்திய அரசில் மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சராக பணியாற்றியவர். அந்த நேரத்தில் ஜவுளித் துறை நெருக்கடிக்கு காரணமாக இருந்த சென்வாட் வரி நீக்க பாடுபட்டவர். பழனி - சாம்ராஜ் நகர் ரயில் பாதை அமைப்பதற்கான ஆரம்ப நிலை பணிகளை தொடக்கி வைத்தவர்” என்று நினைவு கூர்ந்துள்ளார்.
“ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது மனதில் பட்டதை தைரியமாக பேசக்கூடியவர். தொண்டர்களுக்கு சோர்வு ஏற்படும் போதெல்லாம் அவர்களுக்கு, ஊக்கமளித்து உற்சாகப்படுத்துபவர். அவரது இழப்பு தமிழக காங்கிரஸ் கட்சிக்கும், தமிழகத்துக்கும் பேரிழப்பாகும்” என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
“தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத பங்களிப்பு செய்த தலைவர்களில் ஈவிகேஎஸ் இளங்கோவனும் ஒருவர்” என்று அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
“காங்கிரஸ் இயக்கத்தின் சுயமரியாதை தலைவர் என்று சொல்லத்தக்க அளவுக்கு காங்கிரஸ் கட்சியில் தன்னை முழுவதுமாக ஒப்படைத்துக் கொண்டு, தமிழகத்தில் கட்சியை வழிநடத்துகின்ற தலைவராக உயர்ந்தவர். தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வலிமையோடு எடுத்துச் செல்வதற்கு எவருக்கும் அஞ்சாமல் கருத்துகளை முன்வைத்த சிறப்பு அவருக்கு உண்டு” என்று வைகோ புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
“சிறு வயதிலிருந்தே அரசியல் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். முன்னாள் மத்திய அமைச்சராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றி வந்தார்” என்று எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் (76) காய்ச்சல், சளி, மூச்சு திணறல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் கடந்த நவம்பர் 13-ம் தேதி சென்னை கிண்டி அருகே மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், அவருக்கு கடுமையான நுரையீரல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். செயற்கை சுவாசம் பொருத்தி அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், அவரது உடல்நிலையில் பெரிய அளவில் முன்னேற்றமும் ஏற்படவில்லை. கடந்த மாதம் 28-ம் தேதி மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர், அவரது உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றியும் மருத்துவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலையில் அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு கவலைக்கிடமான நிலைக்கு சென்றது. பல்துறை மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்று காலை 10.19 மணிக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காலமானார். இதையடுத்து, அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மருத்துவர் பிரித்வி மோகன்தாஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை காப்பாற்ற மருத்துவப் பணியாளர்கள் எவ்வளவோ முயற்சி செய்த போதிலும் அவர் காலமாகிவிட்டார்” என்று தெரிவித்துள்ளார்.
ஈவிகேஎஸ் இளங்கோவனின் அரசியல் பயணம்:பெரியாரின் பேரனான ஈவிகேஎஸ் இளங்கோவனின் தந்தை ஈ.வே.கி.சம்பத், தாயார் சுலோச்சனா சம்பத் ஆவர். காங்கிரஸ் மாணவரணி செயலாளர், ஈரோடு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர், ஈரோடு நகர காங்கிரஸ் தலைவர், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளராக பதவி வகித்த இளங்கோவன், 2000-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை வகித்தார். பின்னர் 2003-ம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவராக பதவி வகித்தார். இரண்டாவது முறையாக 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பதவியை வகித்தார்.
1984-ம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004-ம் ஆண்டு கோபி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சராக பதவி வகித்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த ஈவிகேஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா கடந்த ஆண்டு ஜனவரி 4-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து அந்தத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு 66 ஆயிரத்து 233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.