Published : 14 Dec 2024 04:14 PM
Last Updated : 14 Dec 2024 04:14 PM

மழை வெள்ள பாதிப்பு: திருச்செந்தூர் கோயிலுக்கு வெளியூர் பக்தர்கள் வருவதை தவிர்க்க ஆட்சியர் அறிவுரை

கோப்புப்படம்

தூத்துக்குடி: மழை மற்றும் வெள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலுக்கு இன்றும் (டிச.14) நாளையும் (டிச.15) வெளியூரிலிருந்து பொதுமக்கள் வருகை தருவதை தவிர்க்க வேண்டும், என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதாலும், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் கன‌மழை காரணமாகவும் தாமிரபரணி ஆற்றில் மிக அதிகமாக வெள்ள நீர் வந்து கொண்டிருக்கிறது. டிச.14-ம் தேதி காலை 9 மணி நிலவரப்படி, தூத்துக்குடி மருதூர் அணைக்கட்டிலிருந்து சுமார் 61,314 கன அடியும், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து சுமார் 54,474 கன அடியும், கோரம்பள்ளத்தில் இருந்து உப்பாற்று ஓடையில் சுமார் 11,900 கன அடி வெள்ள நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கன மழையின் காரணமாக மாவட்டத்தின் பல இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் செல்வதால் மாற்று பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையும், திருநெல்வேலியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலையும், ஏரல் வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலையும் மழை வெள்ளத்தால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து சீர் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.

எனவே, மழை மற்றும் வெள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலுக்கு இன்றும் (14-ம் தேதி) நாளையும் (15-ம் தேதி) வெளியூரிலிருந்து பொதுமக்கள் வருகை தருவதை தவிர்க்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x