

சென்னை: தீ, மின்கசிவால் ஏற்படும் விபத்துகளை தடுக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பாதுகாப்புக்கு தனி பிரிவை அமைக்க வேண்டும் என்று அரசு மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் சாமிநாதன், பொதுச் செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இதுபோன்ற விபத்துகள் தடுக்கப்பட வேண்டும். அப்பகுதி மக்களுக்கும், சக மருத்துவர்களுக்கும் மிகவும் உதவிகரமாக இருந்துவரும் அந்த மருத்துவமனையின் நிர்வாகி, சேதத்தில் இருந்து மீண்டுவர விழைகிறோம்.
மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் தற்போது பல அடுக்கு மாடிகளாக கட்டப்பட்டுள்ளன. பாதுகாப்பு நடைமுறைகளை தினமும் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.
தர மதிப்பீடு மேலாளர் என மாதம் ரூ.60,000 சம்பளத்துக்கு ஒருவரை நியமித்துள்ளனர். அதேபோல, பாதுகாப்பு நடைமுறைகளை கவனத்துடன் கண்காணிக்க, பாதுகாப்பு அதிகாரியாக அதற்கான தகுதிகள் கொண்டவரை நியமிக்க வேண்டும். கடந்த மாதம் நடந்த சந்திப்பில், சுகாதாரத் துறை செயலரிடம் இதை வலியுறுத்தி உள்ளோம். உடனடியாக அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு துறையை ஏற்படுத்தி, இனி வருங்காலங்களில் தீ, மின்கசிவால் ஏற்படும் விபத்துகளை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.