35 ஆண்டுகள் பணி செய்த போலீஸாருக்கு சிறப்பு ஆய்வாளர் பதவி உயர்வு: விருப்ப ஓய்வு பெறுவதை குறைக்க திட்டம்

35 ஆண்டுகள் பணி செய்த போலீஸாருக்கு சிறப்பு ஆய்வாளர் பதவி உயர்வு: விருப்ப ஓய்வு பெறுவதை குறைக்க திட்டம்
Updated on
1 min read

காவலர்களாகப் பணியில் சேர்ந்து 35 ஆண்டுகள் பணி நிறைவு செய்த போலீஸாருக்கு சிறப்பு இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக காவல்துறையில் 2006-2011-ம் ஆண்டு 2-ம் நிலை காவலர்களாகப் பணியில் சேர்ந்தவர்கள், முதல்நிலை காவலர் மற்றும் 15-ம் ஆண்டில் தலைமைக் காவலராகவும், 25-ம் ஆண்டில் சிறப்பு உதவி ஆய்வாளர்களாகவும் பதவி உயர்வு வழங்கி, சம்பளமும் உயர்த்தப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருகின்றனர்.

அதேபோன்று போலீஸார் பயன்பெறும் வகையில் புதிய திட்டம் ஒன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே, அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பணியைத் தொடர விரும்பாத பல போலீஸார், விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.

இதையறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், போலீஸாரை மகிழ்விக்கும் வகையில், காவலர்களாகப் பணியில் சேர்ந்து 35 ஆண்டுகள் பணி செய்தவர்களுக்கு சிறப்பு இன்ஸ்பெக்டர் பதவி வழங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, உயர் போலீஸ் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

அந்த வகையில், 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை 35 ஆண்டுகள் பணிக்காலம் நிறைவு செய்யும் போலீஸாரின் பட்டியலை அனுப்ப மாவட்ட எஸ்.பி.க்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களுக்கு சில வாரங்களுக்கு முன்பு டிஜி.பி. அலுவலகத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், பட்டியல் அனுப்பப்பட்டு வருகிறது. 35 ஆண்டுகள் பணி செய்தவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் 60 பேருக்கும் குறையாமல் உள்ளனர்.

அந்த வகையில், தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் போலீஸார் வரை தகுதி பெறுகின்றனர். இவர்களுக்கு சிறப்பு இன்ஸ்பெக்டர் பதவி வழங்கி, சம்பளத்தையும் உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலை கேள்விப்பட்ட பல போலீஸார் விருப்ப ஓய்வு முடிவில் இருந்து பின்வாங்கி வருவதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in