ராமநாதபுரம் மாவட்டத்தில் வீடுகளைச் சூழ்ந்த மழைநீர் - வெள்ளத்தில் மூழ்கி 10,000 ஏக்கரில் பயிர்கள் சேதம்

பரமக்குடி வெங்கடேஸ்வர காலனி பகுதியில் குடியிருப்புகுளைச் சூழ்ந்துள்ள மழைநீர். | படங்கள்: எல்.பாலச்சந்தர்
பரமக்குடி வெங்கடேஸ்வர காலனி பகுதியில் குடியிருப்புகுளைச் சூழ்ந்துள்ள மழைநீர். | படங்கள்: எல்.பாலச்சந்தர்
Updated on
2 min read

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தொடர் கனமழையால் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. கடலாடி தாலுகாவில் 10 ஆயிரம் ஏக்கர் மிளகாய், மல்லி உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கின.

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பரவலாக கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அதனால் நேற்றம், இன்றும் (டிச.13) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக கமுதியில் 17 செ.மீ மழை பதிவாகியுள்ளது. பரமக்குடி, கடலாடி, வாலிநோக்கம் ஆகிய பகுதிகளில் 10 செ.மீ-க்கும் மேல் மழை பதிவாகியுள்ளது.

பரமக்குடி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு தொடங்கி விடிய, விடிய மழை கொட்டியது. அதனால் முதுகுளத்தூர் சாலையில் உள்ள வெங்கடேஷ்வரா காலனி, சத்தியமூர்த்தி நெசவாளர் காலனி, ராம்நகர், பாலன்நகர் எம்.ஜி.ஆர் நகர், செந்தமிழ் நகர், சோமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது.

பரமக்குடி சிவானந்தபுரம் நகராட்சி தொடக்கப் பள்ளி வளாகத்தில் சூழ்ந்துள்ள மழைநீர்.
பரமக்குடி சிவானந்தபுரம் நகராட்சி தொடக்கப் பள்ளி வளாகத்தில் சூழ்ந்துள்ள மழைநீர்.

அதேபோல் ஐந்துமுனை ரோடு பொன்னையாபுரம் செல்லும் பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் 5 அடிக்கும் மேல் தேங்கியதால், மக்கள் செல்ல முடியவில்லை. அதனால் ரயில் பாதையை கடந்தும், மேம்பாலம் வழியாக அப்பகுதி மக்கள் சென்றனர். சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை நகராட்சியினர் மோட்டார் மூலம் வெளியேற்றி வந்தனர். அதேபோல் பாரதிநகர் பகுதியில் மதுரை சாலையில் மழைநீர் தேங்கி நின்றது. பரமக்குடி சிவானந்தபுரம் நகராட்சி தொடக்கப்பள்ளி வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கியது.

பரமக்குடி பொன்னையாபுரம் செல்லும் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீர்
பரமக்குடி பொன்னையாபுரம் செல்லும் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீர்

கடலாடி தாலுகாவில் தூத்துக்குடி மாவட்டம் மாவிலோடை கண்மாய் உடைந்து தண்ணீர் காட்டாற்று வெள்ளமாக வந்ததால், ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா வி.சேதுராஜபுரம் கிராமம் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது. அதேபோல் வி.சேதுராஜபுரம், உச்சிநத்தம், முத்துராமலிங்கபுரம், கொக்கரசன்கோட்டை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் பயிரிடப்பட்டுள்ள மிளகாய், மல்லி, வெங்காய பயிர்கள் அனைத்தும் மழைநீரில் மூழ்கியது.

சாயல்குடி அருகே ரோஜ்மா நகர் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட 3 நாட்டுப்படகுகள் தண்ணீரில் மூழ்கியது. அதேபோல் கமுதி தாலுகா வீரமறிச்சான்பட்டி கிராமத்தில் 200 ஏக்கருக்கும் மேல் உளுந்து பயிர்கள் மழைநீரில் மூழ்கியது.

கமுதி வீரமறிச்சான்பட்டியில் மழைநீரில் மூழ்கிய உளுந்து பயிர்.
கமுதி வீரமறிச்சான்பட்டியில் மழைநீரில் மூழ்கிய உளுந்து பயிர்.

காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு (மி.மீ): கமுதியில் 170, பரமக்குடியில் 113, வாலிநோக்கத்தில் 114.8, கடலாடியில் 109, முதுகுளத்தூரில் 93.7, ராமநாதபுரத்தில் 66.4, திருவாடானையில் 70, தீர்த்தாண்டதானத்தில் 60.4, ஆர்.எஸ்.மங்கலத்தில் 50, மண்டபத்தில் 21.8, ராமேசுவரத்தில் 30.5, பாம்பனில் 32.3, தங்கச்சிமடத்தில் 33.8, பள்ளமோர்குளத்தில் 44.5, வட்டானத்தில் 44.2, தொண்டியில் 27.5 என மாவட்டத்தில் ஒரே நாளில் 1081.9 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in