

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரில் பருவமழை முன்னேற்பாடு பணிகளை சரிவர மேற்கொள்ளாததால் கடந்த ஆண்டைப் போலவே தற்போதும் முக்கிய சாலைகள், கடைவீதிகள், கோயில்கள், குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
திருநெல்வேலியில் பருவமழை முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதற்காக பல்வேறு ஆலோசனை கூட்டங்களும் நடத்தப்பட்டிருந்தன. ஆங்காங்கே பணிகளும் நடைபெற்றன. ஆனால் மழைநீர் ஓடைகளும், கால்வாய்களும் மராமத்து செய்யப்படாமலும், தூர்வாரப்படாமலும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமலும் உள்ளதை கடந்த சில வாரங்களுக்குமுன் இந்து தமிழ் திசை, புகைப்படங்களுடன் சுட்டிக்காட்டியிருந்தது.
இந்நிலையில், ஒருநாள் மழைக்கே திருநெல்வேலி தாக்குப்பிடிக்காமல் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பரில் அதிக கனமழையின் போது தண்ணீர் தேங்கிய அதே பகுதிகள் தற்போது மீண்டும் தண்ணீரில் தத்தளிக்கின்றன.
திருநெல்வேலி சந்திப்பு பழைய பேருந்து நிலையத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல கோடி ரூபாய் செலவில் புதுப்பித்து கட்டியிருக்கும் நிலையில், தற்போதைய மழையில் பேருந்து நிலையத்தை தண்ணீர் சூழ்ந்திருக்கிறது. ஆய்வு என்ற பெயரில் அமைச்சரும், மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் இந்த பகுதிகளை பார்வையிட்டு செல்கிறார்கள். ஆனால் நிரந்தர தீர்வுக்கு வழி காணப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
பதற்றத்தை உருவாக்கிய சில சமூக ஊடகங்கள்: இதனிடையே கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பரில் திருநெல்வேலியில் பெய்த அதி கனமழையின்போது தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளம், மாநகரில் தண்ணீர் சூழ்ந்திருந்த காட்சிகளை, சிலர் சமூக ஊடகங்களில் மீண்டும் பதிவிட்டு, அவை தற்போது நிகழ்ந்ததாக தெரிவித்து பதற்றத்தை அதிகரித்தனர். இந்த காட்சிகளையும், புகைப்படங்களையும் வெளியூர் நபர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து, உள்ளூர்வாசிகளிடம் விசாரித்து கொண்டே இருந்தனர்.