

மதுரை: திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட விபத்து, தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தனியார் மருத்துவமனைகளில் தீ தடுப்பு நடைமுறைகள் கண்காணிக்கப்படுகிறதா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதுபோன்ற விபத்துகளை தவிர்த்து, நோயாளிகளை பாதுகாக்க ஆட்சியர்கள் களம் இறங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகிறது. இது குறித்து காண்போம்.
திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 3 நோயாளிகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். 32 பேர் படுகாயமடைந்து சிகிச்சையில் உள்ளார்கள். தீ விபத்து ஏற்படும்போது பலர் படிக்கட்டுகளை பயன்படுத்தாமல் லிப்டில் சிக்கியும் புகை நெடியால் மூச்சு திணறல் ஏற்பட்டும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மருத்துவமனையில் குறைவான உள்நோயாளிகளே இருந்ததால் தீ விபத்தின் கொடூரம் குறைவாக உள்ளது. இந்த மருத்துவமனையைவிட பெரிய மருத்துவமனைகளில் இதுபோல் தீ விபத்து ஏற்பட்டிருந்தால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என தீ தடுப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் கவலை தெரிவித்தனர்.
சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், மால்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களை காட்டிலும் மருத்துவமனைகளிலும் தீ தடுப்பு விதிமுறைகளை கூடுதல் கவனத்துடன் கையாள வேண்டும். தீ தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றி, அவசரமாக வெளியேறும் பாதைகளையும் மருத்துவமனை நிர்வாகம் அமைத்து இருந்திருந்தால், தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் ஊழியர்கள் வழிகாட்டியிருந்தால் இதுபோன்ற பெரும் பாதிப்புகளை தடுத்திருக்கலாம் என்று தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தனியார் மருத்துவமனைகள் கவனத்துக்கு... - இனியாவது, தனியார் மருத்துவமனைகளில் தீ தடுப்பு விதிமுறைகள், கட்டமைப்புகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்று மாவட்டங்கள்தோறும் உள்ள மருத்துவமனை நலப்பணிகள் இணை இயக்குநர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிகாரிகள் சொல்வதென்ன? - இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: பொதுவாக பெரும்பாலான தீ விபத்துக்கள் மின்கசிவு, கவனக்குறைவாக எளிதில் தீப்பற்றும் பொருட்களை கையாள்வதால் ஏற்படுகின்றன. தீ விபத்து ஏற்பட்டால் மக்களை வெளியேற்றுவதில் சிரமம் உள்ள இடங்களில் மருத்துவமனை மிக முக்கியமான ஒன்று. மற்ற கட்டிடங்களில் மக்கள் ஆரோக்கியமுடன் ஓடவும், நடக்கவும் கூடியவர்களாக இருப்பார்கள். அவர்களை வெளியேற்றுவது எளிது அல்லது அவர்களே தப்பித்து வெளியேறுவதும் எளிதாக இருக்கும்.
ஆனால், மருத்துவமனைகளில் அசைய முடியாத, நடக்கவும், ஓடவும் முடியாத நோயாளிகளை நகர்த்துவது மருத்துவமனை நிர்வாகத்திற்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் சவாலானது. அதனால், மருத்துவமனைகளில் மற்ற கட்டிடங்களை காட்டிலும் கூடுதல் தீ தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளையும், ஏற்பாடுகளையும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் இந்த தீ தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளும், அவசரமாக வெளியேறும் பாதைகளும் இல்லாமலே மிக நெருக்கடியான சாலைகள், கட்டிடங்களில் செயல்படுகின்றன.
உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க ஒவ்வொரு மருத்துவமனையிலும் நன்கு திட்டமிடப்பட்ட வெளியேறும் வழிகள் மற்றும் நன்கு பராமரிக்கப்பட்ட தீயணைப்பு கருவிகள் இருக்க வேண்டும். மருத்துவமனைகளில் ரசாயனங்கள், சிலிண்டர்கள், அறுவை சிகிச்சை உபகரணங்கள் போன்ற எரியக்கூடிய பொருட்களை அடுக்கி வைக்கப்படுகின்றன. மேலும், பல மருத்துவமனைகளில் கேன்டீன் போன்ற சமையலறை உள்ளடக்கிய இடங்கள் உள்ளன. ஒரே தளத்தில் மருத்துவமனை நோயாளிகள் சிகிச்சை வார்டுகளும், கேன்டீன்களும் இருந்தால், தீ விபத்து ஏற்பட்டால், சில நிமிடங்களில் தீயை கட்டுப்படுத்த முடியாமல் போகலாம்.
தீ விபத்து ஏற்பட்டால் அனைவரும் பின்பற்ற வேண்டிய நன்கு பட்டியலிடப்பட்ட மற்றும் விரிவான செயல் திட்டம் மருத்துவமனைகளில் இருக்க வேண்டும். கட்டிடம் முழுவதும் தீ பரவுவதற்கான சாத்தியக்கூறுகளைக் குறைக்க, கட்டிடத்தில் போதுமான திறந்தவெளி இடம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மருத்துவமனை கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டால் அங்கு சிக்கியிருப்பவர்களை காப்பாற்ற அந்தக் கட்டிடத்தின் ப்ளூ பிரின்ட் காப்பியை உடனடியாக தீயணைப்பு வீரர்களிடம் கொடுக்க வேண்டும்.
மருத்துவமனைகளில் வெப்பநிலையை கண்டறிதல் கருவி, புகை கண்டறிதல் கருவி தீ கண்டறிதல் கருவிகள் முக்கியமான இடங்களில் நிறுவப்பட வேண்டும். அவசர சிகிச்சைப்பிரிவு, தீவிர சிகிச்சைப்பிரவு வார்டுகளில் மின் அழுத்தம் சீராக இருக்கிறதா என்றும் கண்காணிக்க வேண்டும். இந்தக் கருவிகளை சாதாரண நாட்களில் தொடர்ச்சியாக சரிபார்த்து அவை சரியாக செயல்படுகின்றனவா என்பதை மருத்துவமனை நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். விபத்து ஏற்பட்டால் அதை எதிர்கொள்வதற்கும், தற்கொத்து கொள்வதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் மருத்துவமனைகளில் அடிக்கடி நடத்தப்பட வேண்டும்.
மருத்துவமனைகளில் பெரும்பாலும், தவறான வயரிங் அமைப்பு காரணமாக ஏற்படும் மின்கசிவே தீ விபத்துக்கு முக்கிய காரணமாக அமைகின்றன. இதுபோன்ற காரணமே நேற்று திண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீ விபத்துக்கும் காரணமாக அமைந்துள்ளது. மின் கசிவு காரணமாக தீ விபத்துகளைத் தடுக்க, குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த தீ விபத்து தடுப்பு நடைமுறைகளை மருத்துவமனை நிர்வாகங்கள் முறையாக கடைபிடிக்கிறதா என்பதை ஒவ்வொரு மாவட்ட மருத்துவ நலப் பணிகள் துறை இணை இயக்குநர் கண்காணிக்க வேண்டும்.
அவற்றை பின்பற்றாத மருத்துவமனைகளின் லைசென்ஸை ரத்து செய்ய வேண்டும். ஆட்சியர்கள், மாதந்தோறும் இது சம்பந்தமாக ஆய்வுக் கூட்டம் நடத்தி எதிர்காலத்தில் மருத்துவமனைகளில் தீ விபத்துகளை தடுத்து, சிகிச்சை பெறும் நோயாளிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுவாக கோடை காலத்தில்தான் வெப்பநிலை அதிகரித்து மருத்துவமனைகளில் தீ விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பருவமழை காலமான தற்போது திண்டுக்கல் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதிற்கான முழுமையான காரணத்தை கண்டறிந்து, அதை பாடமாக எடுத்துக் கொண்டு இதுபோன்ற தீ விபத்துகள் தமிழகத்தில் வேறு எந்த மருத்துவமனைகளிலும் ஏற்படாமல் இருக்க சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மதுரை மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் செல்வராஜிடம் கேட்டபோது, ‘‘clinical establishment act-படி ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கு ஒரு முறையும் தனியார் மருத்துவமனைகள் நடத்துவதற்கு லைசன்ஸ் வழங்கப்படுகிறது. பயோமெடிக்கல் கழிவுகள், தீ தடுப்பு நடவடிக்கைகள் போன்ற பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக கண்காணித்து லைசன்ஸ் வழங்கப்படுகிறது’’ என்றார்.