

வேலூர்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் நேற்று அதிகாலை முதல் அடைமழை பெய்த நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீடுகளில் முடங்கினர். தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இலங்கை-தமிழக கடலோர பகுதியை நோக்கி நகர்ந்து வருவதால் வேலூர், ராணிப்பேட்டை, திருப் பத்தூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் பரவலான மழை பெய்தது.
தொடர் மழையால் வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெறும் இடங்கள் மோசமான நிலைக்கு மாறியது. கனமழை காரணமாக திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில் நேற்று நடைபெற இருந்த பருவ தேர்வுகள் மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக் கப்பட்டன. தொடர்ந்து, மழை பெய்தபடியே இருந்ததால் ஒருங் கிணைந்த வேலூர் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீடுகளில் முடங்கினர்.
வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான மழை நிலவரப்படி அதிகபட்சமாக வேலூர் ஆட்சியர் அலுவலகம் பகுதியில் 20.4 மி.மீ., பதிவாகியிருந்தது. மேலும், குடியாத்தம் 5.8, மேல்ஆலத்தூர் 5.6, கே.வி.குப்பம் 10, காட்பாடி 10.2, பொன்னை 5, அம்முண்டி 10.2, பேரணாம்பட்டு 2.2, வேலூர் வட்டாட்சியர் அலுவலகம் 15.2 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. நேற்று பகல் முழுவதும் மழை தொடர்ந்து இருந்ததால் வெயிலின் தாக்கம் இல்லை.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ஃபெஞ்சல் புயல் மழை மற்றும் தற்போதைய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஒருங் கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பரவலான கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பயணிக்கும் பாலாற்றில் வெள்ளநீர் செல் கிறது.
ஆந்திர மாநிலம் புல்லூர் தடுப்பணையில் இருந்து பாலாற் றுக்கு வினாடிக்கு 50 கன அடி வீதம் நீர்வரத்து இருக்கிறது. மண்ணாற்றில் இருந்து 50 கன அடி, அகரம் ஆற்றில் இருந்து 75 கன அடி, வெள்ளக்கல் கானாறு, ஆணைமடுகு கானாறு உள்ளிட்ட பல்வேறு கானாறுகளில் இருந்து 75 கனஅடி என மொத்தம் வேலூர் பாலாற்றுக்கு 250 கன அடி வீதம் நீர்வரத்து நேற்றைய நிலவரப்படி இருந்தது.
அதேபோல், பாலாற்றுக்கு முக்கிய நீராதரமாக இருக்கும் பொன்னை ஆற்றின் இருந்து வரப்பெறும் வெள்ளநீரால் வாலாஜா அருகேயுள்ள பாலாறு அணைக்கட்டுக்கு கனிசமான அளவுக்கு வெள்ளநீர் அதிகரித்து காணப்பட்டது. அணைக்கட்டில் நேற்றைய நிலவரப்படி 376 கன அடி அளவுக்கு நீர் வரத்து இருந்தது.
இதே அளவு நீரை அணைக்கட்டின் பக்கவாட்டு கால்வாய்கள் வழியாக ஏரி களுக்கு திருப்பி விட்டுள்ளனர். அதன்படி, பாலாறு அணைக் கட்டில் இருந்து 35 கன அடி நீர் மகேந்திரவாடி ஏரிக்கும், 227 கன அடி நீர் காவேரிப்பாக்கம் ஏரிக்கும், 56 கன அடி நீர் சக்கரமல்லூர் ஏரிக்கும், 58 கன அடி நீர் தூசி ஏரிக்கும் கால்வாய்கள் வழியாக திருப்பியுள்ளனர்.
அணைகள் நிலவரம்: மோர்தானா அணை நீர்த்தேக்கம் 37.62 அடி உயரத் துடன் 261.36 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். அணையில் தற்போது 8.20 அடி உயரத்துடன் 60.40 மில்லியன் கன அடி அளவுக்கு நீர் இருப்பு உள்ளது. ராஜாதோப்பு அணை 24.57 அடி உயரத்துடன் 20.52 மில்லியன் கன அடி நீரை தேக்கிவைக்க முடியும். தற்போதைய நிலையில் 7.35 அடி உயரத்துடன் 1.24 மில்லியன் கன அடி அளவுக்கு நீர் இருப்பு உள்ளது. அதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டியப் பனூர் ஓடை நீர்த்தேக்கம் 26.24 அடி உயரத்துடன் 112.20 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும்.