

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம் பரம், புவனகிரி, விருத்தாசலம், பண் ருட்டி, வடலூர், குறிஞ்சிப்பாடி, வேப்பூர், காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, பரங்கிப்பேட்டை, சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று முன் தினம் இரவு முதல் நேற்று காலை வரை தொடர்ந்து கனமழை பெய்தது.
சற்றேவிட்ட மழை, மதியம் முதல் மீண்டும் தொடர்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. விவசாயப் பணிகளும் பாதிக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் வயல் வெளிகளில் மழை தண்ணீர் தேங்கியுள்ளது. கனமழை அறிவிப்பை தொடர்ந்து, கடலூர் மாவட்த்தில் தென் பெண்ணையாறு கரையோரப் பகுதிகளில் பாதிப்பு ஏற்படக்கூடும் என கண்டறியப்பட்ட தென் பெண்ணையாற்றுச் சாலை, ஓம்சக்தி நகர், கண்டக்காடு, குண்டு உப்பலவாடி, தாழங்குடா ஆற்று முகத்துவாரம், தேவணாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றங்கரைகளை பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இதனை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய ஆட்சியர், “கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகப்படியான தண்ணீர் குடியிருப்பு பகுதிகளில் நுழைவதை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் கரைகளைப் பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
சாத்தனூர் அணையில் இருந்து தற்போதைய நிலவரப்படி விநாடிக்கு13 ஆயிரம் கனஅடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தாழ்வானப் பகுதியில் இருந்து மேட்டுப் பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத் தப்பட்டு வருகிறது.
பகண்டை மற்றும் கடலூர் பகுதிகளில் கடந்தமுறை ஏற்பட்ட பாதிப்புகள் போல வருங்காலங்களில் நிகழாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேவையான இடங்களில் கரையை பலப்படுத்துவதற்கு மணல் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணையாற்று சாலை, கண்டக்காடு, குண்டு உப்பலவாடி, ஓம்சக்தி நகர்பகுதிகளில் கடந்த முறை ஆற்றங்கரை உடைந்து வெள்ளநீர் குடியிருப்புகளில் புகுந்து பாதிப்பு ஏற்பட்டது. அப்பகுதியை போர்க்கால அடிப்படையில் சீர்செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மழை பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தங்களது குறைகள், தேவைகளை தெரிவித்திட மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
விழுப்புரத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: தொடர் மழை காரணமாக இன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஏதேனும் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழகத் தேர்வு இன்று இருந்தால் அத்தேர்வு நடைபெறும் என்று ஆட்சியர் சி.பழனி அறிவித்துள்ளார்.