டிச.29-ம் தேதி 1000 இடங்​களில் நாதக உறுப்​பினர் சேர்க்கை முகாம்

டிச.29-ம் தேதி 1000 இடங்​களில் நாதக உறுப்​பினர் சேர்க்கை முகாம்
Updated on
1 min read

சென்னை: நாம் தமிழர் கட்சி சார்பில் ஒரே நாளில் 1000 இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்தவுள்ளதாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து கடந்த சில மாதங்களாகவே நிர்வாகிகள் கொத்து கொத்தாக வெளியேறி வருகின்றனர். குறிப்பாக தவெக கட்சி ஆரம்பிக்கப்பட்ட பின்பு, நாம் தமிழரில் இருந்து விலகி, தவெகவில் சேரும் நிர்வாகிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கட்சி உட்கட்டமைப்பை மேம்படுத்தும் விதமாக ஒரே நாளில் 1000 இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாமை நடத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டமிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலை வலிமையாக எதிர்கொள்ளும் வகையில், கட்சியின் உட்கட்டமைப்பை விரிவாக்கும் நடவடிக்கையாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையோடு, மகளிர் மற்றும் மாணவர் பாசறை இணைந்து தமிழகம் முழுவதும் வரும் டிச.29-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), ஒரே நாளில் 1000 இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு குறைந்தபட்ச இலக்காக 5 இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்த வேண்டியது கட்டாயமாகும். அந்த 5 இடங்கள் எவை என்பது குறித்து அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும் கலந்தாய்வு செய்து தலைமைக்கு தெரிவிக்க வேண்டும்.

சட்டப்பேரவை தேர்தலை வலிமையாக எதிர்கொள்ள இதனை பேரெழுச்சியாக நடத்தி முடிக்க, கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும், அனைத்து பாசறை பொறுப்பாளர்களும் அணியாகுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in