

சென்னை: கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் நெல்லை, தென்காசி, விழுப்புரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை (டிச.12) செய்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன், “அடுத்த வரும் 24 மணி நேரத்துக்கு வட மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
மேலும் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. நாளை (டிச.13) தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதி, லட்சத்தீவுப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்” என்று தெரிவித்தார்.
இதனையடுத்து நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல விழுப்புரம், தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை மட்டும் (13/12/24) விடுமுறை அளிக்கப்படுகிறது என புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்
கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை மிக தீவிரமாக உள்ளது. கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் அநேக இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் 18 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 4 இடங்களில் மிக கனமழையும், 72 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.