

நாகர்கோவில்: “பிற வழிபாடுகளை இகழ்ந்து பேசுவது சனாதனத்தில் இல்லை. சனாதனம் என்பது சமத்துவம்” என்று குமரியில் நடைபெற்ற அகிலத் திரட்டு உதயதின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
கன்னியாகுமரி மாவட்டம் தென் தாமரைக்குளம் வைகுண்டசாமி பதியில் இன்று அய்யா வைகுண்ட சுவாமி மக்களுக்கு அருளிய அகிலத் திரட்டு அம்மன் உதய தின விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அவர் அய்யா வைகுண்டரின் அகிலத் திரட்டு ஆராய்ச்சி மைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். மேலும் 108 பதிகள், தாங்கல் ஆகியவற்றில் புனித நீர், மற்றும் திருநாமத்தினை பெற்ற அவற்றை அயோத்தி ராமர் கோயிலுக்கு அனுப்பி வைக்கும் நிகச்சியையும் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து அங்கு மரக்கன்று நட்டார். தொடர்ந்து அகிலத் திரட்டு அம்மனை கையால் தொட்டு கும்பிட்ட ஆளுநர் ரவி அகிலத் திரட்டு உதய தின ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலம் சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதி நோக்கி சென்றது. இதில் காவி உடையும், தலைப்பாகையும் தரித்த அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சாமித்தோப்பில் நடைபெற்ற அகிலத் திரட்டு அம்மன் உதய தின விழாவில் கலந்து கொண்டு, அகிலத் திரட்டு அம்மானை நூலை ஆளுநர் வெளியிட திருஏடு பாராயணக்காரர்கள் சிவதவசி, சுதர்சனநாயகி ஆகியோர் நூலை பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும்போது, ''நான் இரண்டு வருடம் முன்பு சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமை பதிக்கு வந்து அய்யாவின் ஆசி பெற்று சென்றேன். தற்போது 3-வது முறையாக வந்துள்ளேன். இது மகிழ்ச்சியாக உள்ளது. எப்போதெல்லாம் சனாதன தர்மத்துக்கு ஆபத்து. ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் நாராயணர் அங்கு அவதரிக்கிறார் என்பது நம்முடைய புனித நூல் கூறும் உறுதியான செய்தி. உயர்வு, தாழ்வு என்பது இல்லை. அனைவரும் சமம் என சனாதனம் அறிவுறுத்துகிறது. சனாதன கோட்பாட்டுக்கு வெளியே யாரும் இல்லை. நம்பாதவர்கள் கூட அந்த கோட்பாட்டின் கீழ் தான் வருகின்றனர்.
பிற வழிபாடுகளை இகழ்ந்து பேசுவது சனாதனத்தில் இல்லை. சனாதனம் என்பது சமத்துவம். பல பாஷைகள், உடை, உணவு, பல வழிபாடு முறை இருந்தாலும் அனைவரும் ஒரே குடும்பத்தில் உறுப்பினர் என்பதே சனாதனத்தின் கோட்பாடு” என்றார். ஆளுநர் வருகையையொட்டி தென்தாமரைகுளம் பதி மற்றும் சுவாமி தோப்பில் எஸ்பி சுந்தரவர்த்தனம் தலைமையில் பரத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.