செம்பரம்பாக்கம் ஏரி | கோப்பு படம்
செம்பரம்பாக்கம் ஏரி | கோப்பு படம்

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு: ஏரியை திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை

Published on

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. “ஏரியின் நீர் மட்டம் 22 அடியை நெருங்கும்போது முறைப்படி அடையாற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். அதன் பிறகு செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படும்,” என்று நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்குவது செம்பரம்பாக்கம் ஏரி. இந்த ஏரியின் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று (டிச. 12) காலை நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 21.18 அடியாக உயர்ந்தது. ஏரியின் மொத்த கொள்ளவு 24 அடி. தற்போது ஏரியில் 2903 மில்லியன் கன அடி நீர் உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 713 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இதனால் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் விரைவில் ஏரியின் நீர் மட்டம் 22 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏரியின் நீர் மட்டம் 22 அடியை எட்டிய உடன் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறப்பது வழக்கம். இதனால் நீர்வளத்துறை அதிகாரிகள் ஏரியின் நீர் மட்டம் 22 அடியை எட்டிய உடன் செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பது குறித்து அலோசனை நடத்தினர். இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது “ஏரியின் நீர் மட்டம் 22 அடியை நெருங்கும்போது முறைப்படி அடையாற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். அதன் பிறகு செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படும்,” என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in