Published : 18 Jul 2018 08:21 PM
Last Updated : 18 Jul 2018 08:21 PM

கல்வீச்சுக்கெல்லாம் அஞ்ச மாட்டேன்: டிடிவி தினகரன் எச்சரிக்கை

தனது தொகுதிக்குள் நுழைந்த டிடிவி தினகரனுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது கார் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. அதிமுக மற்றும் அமமுக கட்சியினர் மோதிக்கொண்டதில் போலீஸார், தொண்டர்கள் காயம் அடைந்தனர்.

டிடிவி தினகரன் இன்று காலை தனது ஆர்.கே.நகர் தொகுதி அலுவலகத்துக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தொகுதிக்குள் வரும் டிடிவி தினகரனுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அதிமுகவினர் தண்டையார் பேட்டை காவல்நிலையம் அருகே திரண்டனர். மறுபுறம் டிடிவி ஆதரவாளர்களும் திரண்டிருந்தனர்.

இதனால் பதற்றமான சூழல் நிலவியது. மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர். டிடிவி தினகரன் தனது கட்சி அலுவலகத்துக்கு வந்தார். அவரது காரை நோக்கி கல் வீச்சு நடத்தப்பட்டது. இதனால் இரு தரப்பிலும் மோதலில் ஈடுபட்டனர்.

கல்வீச்சில் அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள் சிலர் காயம் அடைந்தனர். எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேமாவுக்கும் காயம் ஏற்பட்டது. டிடிவி தினகரனுக்கு எதிராக 20 ரூபாய் நோட்டை காட்டி அதிமுகவினர் கோஷமிட்டனர். இதையடுத்து கூடுதல் ஆணையர் ஜெயராமன், தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு  தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''எனது தொகுதிக்கு வந்த என்னை அதிமுகவினர் தடுக்கிறார்கள். இப்படிச் செய்தால் தொகுதிக்கு வரமாட்டேன் என நினைத்துப் போராட்டம் நடத்துகிறார்கள். இந்த கல்வீச்சுக்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன். கல்வீசித் தாக்கியவர்கள் யார் என்பது எங்களுக்கு தெரியும். தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கு நீதிமன்றத்தை அணுக உள்ளோம்.

எங்களுக்கு எதிராக 20 ரூபாய் நோட்டைக் காட்டி போராட்டம் நடத்தியவர்கள் பொதுமக்கள் இல்லை. என் பெயரைச் சொல்லி டோக்கன் வழங்கியவர்கள் அதிமுகவினர்தான். அவர்கள்தான் இப்போது போராட்டம் நடத்தி வன்முறையில் ஈடுபடுகிறார்கள்'' என்று தினகரன் தெரிவித்தார்.

பின்னர் தினகரனை போலீஸார் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x