

கட்டிட வாடகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிப்பதை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் 56 இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடைகள் உள்ளிட்ட கட்டிடங்களுக்கு வாடகையாக செலுத்தப்படும் தொகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சிகளில் சொத்துவரியும் 6 சதவீதம் உய்ர்த்தப்பட்டுள்ளது. வணிக உரிமக்கட்டணம், தொழில்வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கட்டிட உரிமையாளர்கள் மட்டுமன்றி வாடகை கட்டிடத்தில் வணிகம் செய்து வரும் வணிகர்களும், பொதுமக்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநகரங்கள் என மொத்தம் 56 இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் விக்கிரமராஜா கூறியதாவது: வாடகை கட்டிடத்துக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதையும், ஆண்டுதோறும் 6 சதவீதம் சொத்துவரி உயர்த்துவதையும் கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறோம். வணிகர்கள் மீது போடும் குப்பை வரி, தொழில் உரிம வரி உயர்வையும் திரும்ப பெற வேண்டும். வியாபாரிகளின் மனநிலையைப் புரிந்து கொண்டு தமிழக அரசு அனைத்து வரிகளையும் குறைக்க வேண்டும். மாநகராட்சி அதிகாரிகள் கடை கடையாக சென்று உயர்த்தப்பட்ட வரி விதிப்பதை நிறுத்த வேண்டும்.
வரும் 27 ஆம் தேதி தென் மாநில வணிகர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் மார்ச் மாதத்தில் டெல்லியை நோக்கி மாபெரும் பேரணி மற்றும் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். இதற்கும் மத்திய அரசு செவி சாய்க்காவிட்டால் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேரமைப்பின் பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா, மாநில கூடுதல் செயலாளர் வி.பி.மணி, சென்னை ஜூவல்லரி அசோசியேஷன் தலைவர் ஜெயந்திலால் செலானி, சென்னை ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.ரவி, கோயம்பேடு சந்தை கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.