“தொடர் தோல்விகளை சந்திப்பவர்கள் தங்கள் இருப்பை காட்ட அவதூறு பரப்புகிறார்கள்” - அமைச்சர் செந்தில் பாலாஜி 

“தொடர் தோல்விகளை சந்திப்பவர்கள் தங்கள் இருப்பை காட்ட அவதூறு பரப்புகிறார்கள்” - அமைச்சர் செந்தில் பாலாஜி 
Updated on
1 min read

கோவை: கோவையில் புதன்கிழமை (டிச.11) மாலை நடந்த தனியார் நிகழ்ச்சியில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை மாநகராட்சியில் சாலை பணிகளுக்காக ரூ.200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கூடுதலாக காந்திபுரம் பேருந்து நிலையத்தை புதுப்பிக்க ரூ.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சத்தி சாலை அகலப்படுத்துவதற்காக ரூ.54 கோடி ரூபாய் ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கூடுதல் நிதி தேவைப்பட்டாலும் அதனை தருவதற்கு முதல்வர் தயாராக இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, அதானி- திமுக தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்து வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதில் அளித்து கூறும்போது,"சிலருக்கு ஊரில் வேலை வெட்டி இல்லை. எனவே சில கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

உள்ளூரில் நின்றாலும் தோல்வி, வெளியூரில் நின்றாலும் தோல்வி என தொடர் தோல்விகளை சந்தித்து வரக்கூடியவர்கள், அவர்களுடைய இருப்பை காட்டுவதற்காக அவதூறு கருத்துக்களை பரப்புகிறார்கள்.

அவதூறு கருத்துக்களை பற்றி கவலைப்படுவதற்கு அவசியம் இல்லை. அரசியல் என்பது நாகரிகமாக இருக்க வேண்டும். அரசியலில் இருக்கக்கூடியவர்கள் பக்குவப்பட்டவர்களாக இருக்க வேண்டும். கருத்துக்கள் தெரிவிக்கும் பொழுது யாரையும் பழிச்சொல் பேசுவது போல் இல்லாமல் இருக்கும் வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். அரசியலுக்கு தகுதி இல்லாதவர்கள் அது போன்ற வார்த்தைகளை தான் பயன்படுத்துவார்கள். பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் முதல்வர் தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.

அனைத்து துறைகளும் மழையை எதிர்கொள்வதற்கு தயாராக உள்ளது. விழுப்புரம், கடலூரில் ஏற்பட்ட பாதிப்புகள் இரண்டு நாட்களில் சகஜ நிலைக்கு திரும்ப நின்ற அளவிற்கு அரசின் இயந்திரம் சிறப்பாக செயல்பட்டது"இவ்வாறு செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in