Published : 11 Dec 2024 05:48 PM
Last Updated : 11 Dec 2024 05:48 PM

விசிக கொடிக்கம்ப விவகாரம்: மதுரையில் 1,000+ அரசு ஊழியர்கள் போராட்டமும் பரபரப்பும்

மதுரை: மதுரை அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்ற அக்கட்சியின் கொடியேற்று விழா விவகாரத்தில் 3 வருவாய்த் துறை ஊழியர்களின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய கோரியும், அரசியல் கட்சிகள் மோதலுக்கு கடைநிலை ஊழியர்களை தொடர்ந்து பலிகடாவாக்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தாசில்தார் அலுவலகங்களுக்கு ‘பூட்டு’ப் போட்டு 1,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

மதுரை புதூரில் கடந்த செப்டம்பரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கொடியெற்றுவதற்காக புதிதாக அக்கட்சியின் 62 அடி கொடிக்கம்பம் நடப்பட்டது. அனுமதியின்றி நடப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவால் காவல் துறையினர் இரவோடு இரவாக கொடிக்கம்பத்தை அகற்றினா். அதிருப்தியடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மதுரை - அழகர் கோயில் சாலையில் மறியல் செய்தனர்.

மறுநாள் திருமாவளவன் கொடியேற்ற இருந்ததால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதால் மாவட்ட நிர்வாகம் கடைசி நேரத்தில் கொடிக் கம்பம் நடுவதற்கு அனுமதி வழங்கியது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மதுரை வந்த திருமாவளவன், “மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா பொறுப்பேற்றதில் இருந்து விடுதலை சிறுத்தை கட்சியினர் எங்கு கொடி நட்டாலும் அவர் தேவையில்லாமல் குறுக்கிடுகிறார், தனிப்பட்ட முறையில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா விடுதலைச் சிறுத்தைக்கு எதிராக செயல்படுவது தெரியவருகிறது” என்று நேரடியாகவே குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், மதுரை மாவட்டம் வெளிச்சநத்தம் கிராமத்தில் கடந்த 8-ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருமாவளவன் கொடியேற்றுவதற்காக 45 அடி கொடி கம்பம் நடப்பட்டது. இதற்கு முறையாக அனுமதி பெறவில்லை என கூறி வருவாய்த் துறையும், காவல் துறையும் ஆரம்பத்தில் அனுமதி மறுத்தனர். புதூரை போல், வெளிச்சநத்தத்திலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தடுத்த வருவாய்த் துறை ஊழியர்கள் தாக்கப்பட்டனர். சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதால், மாவட்ட நிர்வாகம் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பத்துக்கு இடைக்கால அனுமதி வழங்கியது. தொல்.திருமாவளவனும், 7-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெளிச்சநத்ததத்தில் கொடியேற்றி சென்றார்.

இந்தப் பிரச்சினை முடிந்ததாக நினைத்த நிலையில், செவ்வாய்க்கிழமை திடீரென்று மாவட்ட நிர்வாகம், விடுதலைச் சிறுத்தைகள் கொடிக் கம்பம் பற்றி உரிய தகவலை தெரிவிக்கவில்லை என்று கூறி சத்திரப்பட்டி பிர்கா வருவாய் அதிகாரி வனிதா, காவனூர் கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம், வெளிச்சநத்தம் கிராம நிர்வாக உதவியாளர் பழனியாண்டி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதேபோல், செப்டம்பர் மாதம் புதூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 62 அடி உயர கொடிக் கம்பம் விவகாரத்திலும் 2 வருவாய்த் துறை ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டத்தில் அரசியல் கட்சிகளிடையே நீடிக்கும் அரசியல் மோதலில் மாவட்ட நிர்வாகம், திடமான நடவடிக்கை எடுக்க முடியாமல் தடுமாறும் நிலையில், பிரச்சினையை திசைத் திருப்பவும், தங்கள் தவறை மறைக்க வருவாய்த் துறை கடைநிலை ஊழியர்கள் தொடர்ந்து பலிகாடாக்கி வருவதை கண்டித்தும், வருவாய்த் துறை அலுவலர்கள் 3 பேர் மீது எடுத்த நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் வாபஸ் பெற வலியுறுத்தியும், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மாவட்டம் முழுவதும் வருவாய்த் துறை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தாசில்தார் அலுவலகங்களுக்கு பூட்டுப் போட்டு, அங்கு பணியாற்றிய ஊழியர்கள், வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.

ஆட்சியர் அலுவலகம், தேர்தல் அலுவலகம் உள்ளிட்ட பிற அலுவலங்களில் பணிபுரியும் அனைத்து வருவாய் துறை அதிகாரிகள், ஊழியர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒன்றுகூடி வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியதால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடந்த இந்தப் போராட்டத்தில் 9 வருவாய்த் துறை அலுவலங்கள் சங்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இதுபோல், மாவட்டம் முழுவதும் உள்ள தாசில்தார் அலுவலகங்கள், பிற வருவாய் அலுவலங்களிலும் பணிபுரியும் 1,800-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்களிடம் ஆட்சியர் சங்கீதா கடைசி வரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

இது தொடர்பாக வருவாய் அலுவலர்கள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் முருகையன் கூறுகையில், “மாவட்ட நிர்வாகத்தின் தவறுக்கு கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது. அவர்கள் மீது எடுத்த நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். பாதுகாப்பு வழங்க தவறிய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் பணியிடை நீக்கம் உத்தரவை ரத்து செய்யாவிட்டால் மாநில அளவில் விரிவுப்படுத்தி தொடர் பணிப் புறக்கணிப்பு போராட்டமாக மாற்றப்படும். பொது மக்களுக்கு சான்றிதழ் வழங்குவது, பட்டா மாறுதல், வாக்காளர் பட்டியல் தயாரிப்பு போன்ற பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சிரமத்தையும், எங்கள் போராட்டத்தின் பாதிப்பை மாவட்ட ஆட்சியர் உணர்ந்து கொள்ள வேண்டும்”’ என்றார்.

யாரை திருப்திப்படுத்த இந்த நடவடிக்கை? - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி, பொதுச் செயாலாளர் சு.ஜெயராஜராஜேஸ்வரன் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த செப்டம்பரில் கோ.புதூரில் இதே கட்சி கொடிக்கம்பம் நிறுவியபோதும் கிராம உதவியாளர் தற்காலிக பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். தற்போது 3 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் இடையே நீடிக்கும் அரசியலில் மோதலில் இதுபோன்ற கொடிக்கம்பம் பிரச்சினை தொடர் நிகழ்வாகி வருகிறது. அரசியல் அழுத்தங்களுக்காகவும், அரசியல்வாதிகளைத் திருப்திப்படுத்துவதற்காகவும் மாவட்ட நிர்வாகம், கடைநிலை ஊழியர்களை பலிகடா ஆக்குவதை ஏற்க இயலாது. மதுரை மாவட்ட நிர்வாகம் ஊழியர் விரோதப் போக்கை கைவிட்டு இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்” எனக் கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x