Published : 11 Dec 2024 05:56 PM
Last Updated : 11 Dec 2024 05:56 PM
புதுடெல்லி: திருச்சி, வேலூர் மாவட்ட நூலகங்களுக்கு மத்திய அரசு ரூ.1.47 கோடி நிதி உதவி செய்துள்ளதாக, நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் எழுப்பியக் கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில், வேலூர் தொகுதி எம்.பி. கதிர் ஆனந்த், நாட்டில் உள்ள நூலகங்களின் தரத்தை உயர்த்தவும் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் அதன் விவரங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், நூலகங்களுக்கான தேசிய இயக்கத்தின் கீழ், தமிழகம் உட்பட நாட்டில் மாநில வாரியாக, மத்திய நூலகங்கள் மற்றும் மாவட்ட நூலகங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் எழுத்துபூர்வமாக அளித்த பதிலின் விவரம்: ‘இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின்படி, நூலகம் ஒரு மாநில அரசின் அதிகார வரம்புக்கு கீழ் வருகிறது. மேலும் பொது நூலகங்கள் அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அதிகாரிகளின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்றன. நாட்டில் உள்ள நூலகங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, நூலகங்களை அமைப்பது அந்தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வரம்புக்கு உட்பட்டது. இருப்பினும், கலாச்சார அமைச்சகம் அதன் தேசிய நூலகங்கள் (எம்எம்எல்) திட்டத்தின் மூலம், மாதிரி நூலகக் கூறுகளை அமைப்பதன் கீழ், தலா ஒரு மத்திய நூலகம் மற்றும் மாவட்ட நூலகத்துக்கு நிதி உதவி வழங்குகிறது.
தமிழகத்தில் திருச்சி மாவட்ட நூலகம் மற்றும் வேலூர் மாவட்ட நூலகத்துக்கு முறையே ரூ.68.16 லட்சம் மற்றும் ரூ.79.27 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் சென்னை கன்னிமாரா நூலகக் கட்டிடத்தின் வளர்ச்சி, மறுசீரமைப்பு, புதுப்பித்தல் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்ய முன்மொழிவு எதுவும் பெறப்படவில்லை’ என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT