Published : 11 Dec 2024 01:25 PM
Last Updated : 11 Dec 2024 01:25 PM
சென்னை: 2024-ம் ஆண்டுக்கான வைக்கம் விருது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தேவநூர மஹாதேவா-வுக்கு வழங்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தேவநூர மஹாதேவா-வுக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தங்க முலாம் பூசிய பதக்கம் தமிழக முதல்வரால் வைக்கத்தில் நாளை (டிச.12) நடைபெற உள்ள நிகழ்ச்சியில் வழங்கப்படும், என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவையில், கடந்த 30.03.2023 அன்று எல்லை கடந்து சென்று சமூக நீதிக்காக வைக்கத்தில் போராடிய தந்தை பெரியாரை நினைவுகூறும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் “வைக்கம் விருது” சமூகநீதி நாளான செப்டம்பர் 17-ம் நாளன்று தமிழக அரசால் வழங்கப்படும் என்று 110-விதியின்கீழ் அறிவித்தார்.
அந்த அறிவிப்பின்படி, 2024-ஆம் ஆண்டுக்கான “வைக்கம் விருது” கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டத்தை சேர்ந்த புகழ் பெற்ற எழுத்தாளர் தேவநூர மஹாதேவா-வுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவநூர மஹாதேவா ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர். மக்களின் மொழியியல் உரிமைகளின் மீதான நிலைப்பாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர். மேலும், சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்டவர். இவர் மத்திய அரசின் உயரிய விருதான பத்மஶ்ரீ மற்றும் சாகித்ய அகாடமி விருது போன்ற பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
வைக்கம் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டதேவநூர மஹாதேவா-வுக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தங்க முலாம் பூசிய பதக்கம் தமிழக முதல்வரால் கேரள மாநிலம் வைக்கத்தில் நாளை (டிச.12) நடைபெற உள்ள வைக்கம் நினைவகம் திறப்புவிழா நிகழ்ச்சியில் வழங்கப்படும், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் நெகிழ்ச்சி: கேரள மாநிலம் வைக்கத்தில், நாளை (டிச.12) நடைபெறவிருக்கும் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். இதுதொடர்பாக அவர், தனது சமூகவலைதளப் பக்கத்தில், “நூறாண்டுகளுக்கு முன்பு நமது சமூகம் எப்படியிருந்தது, இப்போது நாம் எங்கு வந்தடைந்திருக்கிறோம் என்று சற்று நினைத்துப் பாருங்கள். இந்த மாற்றங்களுக்கு விதை தூவிய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் நாளை நான் நேரில் கலந்துகொள்கிறேன்.” என்று முதல்வர் கூறியுள்ளார்.
மேலும், இத்துடன் வைக்கம் போராட்டம் குறித்த 6 நிமிட காணொளி ஒன்றையும் இணைத்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில், பெரியார் தலைமையில் நடைபெற்ற வைக்கம் போராட்டம் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
ഒന്നു ആലോചിച്ചു നോക്കൂ, നൂറ് വർഷങ്ങൾക്കു മുൻപ് നമ്മുടെ സമൂഹം എവിടെയായിരുന്നു, ഇപ്പോൾ നാം എവിടെ എത്തിനിൽക്കുന്നു...
ഈ മാറ്റങ്ങൾക്കു വിത്തു പാകിയ വൈക്കം സത്യാഗ്രഹത്തിന്റെ ശദാബ്ദി സമാപന ആഘോഷത്തിൽ നാളെ ഞാൻ നേരിൽ പങ്കെടുക്കുന്നതാണ്.
അതെ പറ്റിയുള്ള വീഡിയോ:
நூறாண்டுகளுக்கு முன்பு… pic.twitter.com/XRqxdnrS65— M.K.Stalin (@mkstalin) December 11, 2024
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT