

சென்னை: கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கத்துக்கான பரிசுத்தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மத நல்லிணக்கத்துக்காக பாடுபட்டு சிறப்பாக சேவை செய்துவரும் நபர் ஒருவருக்கு, ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில், ‘கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்’ விருது முதல்வரால் கடந்த 2001-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதில் ரூ.9 ஆயிரம் மதிப்புடைய தங்க பதக்கத்துடன் ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகையும், சான்றிதழும் வழங்கப்படும்.
இந்நிலையில் 2025-ம் ஆண்டு முதல் நடைபெறும் குடியரசு தின விழாவில் இருந்து வழங்கப்படும் ‘கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கத்துக்கான’ பரிசுத்தொகை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கத்துக்கான பரிசுத்தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுடையவராவர்.