

சென்னை மெரினா வளைவு சாலையில் உள்ள நொச்சிக்குப்பத்தில் மாநகராட்சி சார்பில் ரூ.15 கோடியில் 366 கடைகள் கொண்ட நவீன மீன் அங்காடி அமைக்கப்பட்டது. இதில் மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான குடிநீர், கழிப்பறை வசதிகள், மீன்களைச்சுத்தம் செய்யத் தனியாக 2 பகுதிகள், இவ்வளாகத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரிக்கும் நிலையம் மற்றும் 60 இருசக்கர வாகனங்கள், 110 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நவீன மீன் அங்காடியை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். அக்டோபரில் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில், தற்போது, முன்பு இருந்ததைப் போலவே, திறந்தவெளியில் மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
ஒரு கடையும், வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நடத்தப்படவில்லை. காலம் காலமாக சாலையோரம் கடை வைத்தவர்கள், தங்கள் பழக்கத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லையா? இதை மாநகராட்சி முறைப்படுத்தக்கூடாதா? ரூ.15 கோடி செலவிட்டு மீன் அங்காடி அமைத்ததற்கான நோக்கமே பாழாகியுள்ளது என மீன் வாங்க வரும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து திறந்த வெளியில் கடை வைத்திருக்கும் மீன் வியாபாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது: இங்குள்ள கடைகளில் போதுமான தண்ணீர் வசதி, தூய்மை என அனைத்து வசதிகளும் உள்ளன. முன்பு சாலையோரம் நாங்கள் வெயிலில், துர்நாற்றத்தில் இருந்த நிலையை நினைத்து பார்க்கும்போது, நாங்கள் சொர்க்கத்தில் அமர்ந்து வியாபாரம் செய்வது போன்று மகிழ்ச்சியை தருகிறது. ஆனால் இந்த அங்காடியில் முதல் வரிசையில் உள்ள கடைகளுக்கு தான் பொதுமக்கள் வருகின்றனர். பின் பகுதியில் உள்ள கடைகளுக்கு பொதுமக்கள் வருவதில்லை. அதனால் அவர்கள் வியாபாரமும், வருமானமும் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
ஆலோசகர்களை நியமித்து, ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட உயரதிகாரிகள் கூடி சிந்தித்து திட்டத்தை செயல்படுத்துவதாக கூறுகின்றனர். ஆனால் இது போன்ற நடைமுறை சிக்கல்கள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் யோசிக்கவும் இல்லை. தீர்வு காணவும் முயற்சிக்கவில்லை. எங்களை மீன் அங்காடிக்குள் அடைத்ததோடு அவர்களின் கடமை முடிந்துவிட்டது. மீன் வாங்க யாரும் வராததால், பின்பகுதி கடை வியாபாரிகள் முதலில் வெளியில் வந்து கடை அமைத்தனர். இப்போது அனைவரும் வெளியில்தான் கடை அமைத்துள்ளனர்.
எங்களுக்கு நிரந்தரமாக கடை ஒதுக்கியதற்கு பதில், சுழற்சி முறையில் ஒரு வாரம் முன்வரிசை, ஒரு வாரம் பின்வரிசை என கடைகளை ஒதுக்கி இருக்கலாம். அப்போது தான் அனைவருக்கும் சமமான வியாபாரம் நடைபெறும். வெளியில் கடை போடுவது தடுக்கப்படும். சிலர் கடைகளை சில லட்ச ரூபாய்களை வாங்கிக்கொண்டு, பிற வியாபாரிகளுக்கு வாடகைக்கு விடுகின்றனர். இதை தடுக்க வேண்டும். இவ்வாறு வியாபாரிகள் தெரிவித்தனர். மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “வெளியில் கடை போடுவதை தடுக்க நடவடிக்கை எடுககப்படும்” என்றனர்.