

சென்னை: தாம்பரம் - சந்த்ரகாச்சி சிறப்பு ரயில் உள்பட 8 சிறப்பு ரயில்களின் சேவை காலத்தை நீட்டித்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வேயில் முக்கிய வழித்தடங்களில் பயணிகளின் தேவைகள் அடிப்படையில் வழக்கமான ரயில்களில் கூடுதல் பெட்டிகள் சேர்ப்பு, சிறப்பு ரயில்கள் இயக்குவது போன்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த ரயில்களுக்கு பயணிகளிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, அவற்றின் சேவை காலம் நீட்டிக்கப்படுகிறது. அந்தவகையில், தாம்பரம் - சந்த்ரகாச்சி சிறப்பு ரயில் உள்பட 8 சிறப்பு ரயில்களின் சேவை காலம் நீட்டிக்கப்பட உள்ளது.
தாம்பரம் - மேற்குவங்க மாநிலம் சந்த்ரகாச்சிக்கு வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயிலின் (06095) சேவை காலம் டிச.19 முதல் ஜன.23-ம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளது. மறுமார்க்கத்தில் சந்த்ரகாச்சி - தாம்பரம் இடையே வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (06096) சேவை காலம் டிச.20 முதல் ஜன.24-ம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளது.
அத்துடன் திருநெல்வேலி - ஷாலிமர் வாராந்திர சிறப்பு ரயில் (06087), ஷாலிமர் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் (06088) உள்பட 6 சிறப்பு ரயில்களின் சேவையும் நீட்டிக்கப்பட உள்ளது. இந்த தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.