

சென்னை: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இன்று (டிச.8) முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் 10 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில், ரயில் பாதுகாப்பு இயக்கத்தைக் கருத்தில் கொண்டு, நவ.22-ம் தேதி முதல், சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இருமார்க்கமாகவும் 14 மின்சார ரயில்களின் சேவை வார நாட்களில் மட்டும் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் 10 ரயில்களின் சேவை ரத்து செய்து, புதிய அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, “இன்று (டிச.8) முதல் புதிய அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. மறு உத்தரவு வரும்வரை இந்த மின்சார ரயில்கள் ரத்து தொடரும். கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தற்போது 200 மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 10 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது” என்று சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் பேருந்துகள் இயக்கம்: மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தெற்கு ரயில்வே அறிவிப்பைத் தொடர்ந்து இன்று (டிச.8) முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகள் நலன் கருதி தாம்பரம் முதல் பிராட்வே வரை கூடுதலாக 10 பேருந்துகளும், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை 5 பேருந்துகளும், கூடுவாஞ்சேரி முதல் தியாகராய நகர் வரை 5 பேருந்துகள் என மொத்தம் 20 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.