

சென்னை: நிதி மோசடி வழக்குகளில் தொடர்புடையவர்கள் நாடு திரும்பும் வகையில் நிபந்தனைகளுடன் லுக்-அவுட் நோட்டீஸை நிறுத்தி வைக்கலாம் என விசாரணை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
வங்கி நிதிமோசடி வழக்குகளில் தொடர்புடைய பதான் அப்சர் உசேன், ஜீவானந்தம் ராஜேஷ் ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து இருவரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரி்த்த நீதிபதி என்.சேஷசாயி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள வாழ்வுரிமை என்பது தொழில் மேம்பாடு, கல்வி, புனிதப் பயணம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அனுமதிப்பது. நீதி பரிபாலனம் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டுமேயன்றி தனிப்பட்ட வாழ்வுரிமையை பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது. வழக்கு விசாரணையை எதிர்கொள்பவர்கள் வெளி நாடுகளுக்கு தப்பிச்சென்று விடுவர் என்ற அச்சம் சிபிஐ போன்ற புலனாய்வு அமைப்புகளுக்கு வரக்கூடாது.
அப்படியே தப்பிச் சென்றாலும் அவர்கள் நாடு திரும்பும் வகையில் விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். நிதி மோசடி தொடர்பான வழக்குகளில் தொடர்புடையவர்கள் வெளி நாடுகளுக்கு தப்பித்துவிடுவதால் தான் ஒவ்வொரு வழக்கிலும் லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. குற்றம்சாட்டப்படும் நபர்கள் வெளிநாடு செல்வதற்கு உரிமை இருப்பது போல, அந்த நபர்கள் நாடு திரும்புவதை உறுதி செய்யும் வகையில் நிபந்தனைகளை விதிக்கலாம்.
லுக்-அவுட் நோட்டீஸூக்கு மாற்று நடவடிக்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வரை தனி நபரின் பயண உரிமையை பாதிக்காத வண்ணம் லுக்-அவுட் சுற்றறிக்கையை நீடிக்கலாம். ஒருவேளை குற்றம்சாட்டப்பட்ட நபர் வெளி நாடு செல்வதாக இருந்தால் லுக்-அவுட் நோட்டீஸை நிறுத்தி வைக்கக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம்.
அப்போது குறிப்பிட்ட தொகையையோ அல்லது அதற்கு ஈடான சொத்துக்களையோ நீதிமன்றத்தில் உத்தரவாதமாக தாக்கல் செய்ய விசாரணை நீதிமன்றங்கள் நிபந்தனை விதிக்கலாம். அவர்களது உறவினர்களின் பாஸ்போர்ட்டை விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைக்க உத்தரவிடலாம். இதுபோன்ற நிபந்தனைகளை பூர்த்தி செய்யும்பட்சத்தில் லுக்-அவுட் நோட்டீஸை நிறுத்திவைத்து வெளிநாடு செல்ல அனுமதிக்கலாம்.
இந்த வழக்கைப் பொருத்தமட்டில் மனுதாரர்கள் இருவரும் தலா ரூ. 10 லட்சத்துக்கு சொந்த பிணையுடன், அதே தொகைக்கு இருநபர் ஜாமீன் உத்தரவாதம் அளிக்க வேண்டும். உறவினரது பாஸ்போர்ட்டை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். இந்த நிபந்தனைகளை பூர்த்திசெய்யும் பட்சத்தில் அவர்கள் மீதான லுக்-அவுட் நோட்டீஸ் நிறுத்தி வைக்கப்படுகிறது. இருவரும் வெளிநாடு செல்ல அனுமதிக்கலாம். இவ்வாறு உத்தரவில் தெரிவித்துள்ளார்.