

மதுரை: அரிட்டாப்பட்டி உள்ளிட்ட 48 கிராமங்களையும் பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் பெருக்க வேளாண் மண்டலமாக அறிவிக்க கொள்கை முடிவெடுத்து தமிழக அரசு அரசிதழில் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டியில் இன்று மத்திய அரசு டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க ஏலம் விட்டுள்ள பகுதியில் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அவருடன் முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் சங்கச் செயலாளர் எல்.ஆதிமூலம், மாநில இளைஞரணித் தலைவர் அருண், தமிழக காவிரி விவசாயிகள் சங்க துணை செயலாளர் எம்.செந்தில்குமார், மாநில இளைஞரணி செயலாளர் மகேஸ்வரன், மதுரை மாவட்டச் செயலாளர் துரைசாமி ஆகியோர் அப்பகுதி மக்களை சந்தித்து பேசினர்.
அதன் பின்னர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அரிட்டாபட்டியை சுற்றி 7 மலைகளையுடைய 48 கிராமங்கள் விவசாய பூமியாக உள்ளன. இங்குள்ள சமணர் கால கல்வெட்டுகள், சிற்பங்கள், வரலாற்றுச் சுவடுகளை கிராம மக்கள் பாதுகாத்து வருகின்றனர். தமிழகத்தின் முதல் பல்லுயிர் தலமான இப்பகுதியை அழிக்கும் வகையில் டங்ஸ்டன் கனிமக் கொள்ளைக்கு வேதாந்தாவுக்கு ஏலம் விட முயற்சிக்கும் மத்திய அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.
அரசியல் கட்சிகள் இப்பகுதிகளை நேரில் பார்வையிட்டு கருத்து தெரிவிக்க வேண்டும். தமிழக அரசு டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வருவதை வரவேற்கிறோம். அதில் அரிட்டாப்பட்டி உள்ளிட்ட 48 கிராமங்களையும் பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் பெருக்க வேளாண் மண்டலமாக அறிவிக்க கொள்கை முடிவெடுத்து அரசிதழில் வெளியிட வேண்டும். இத்திட்டத்தை மத்திய அரசு கைவிடும் வரை காத்திருப்புப் போராட்டத்தை தொடங்க உள்ளோம்” என்று அவர் கூறினார்.