பள்ளிப் பிள்ளைகளுக்கு பால், முட்டை வழங்கும் திட்டம்! - மகளிர் வாக்குகளை மடைமாற்றும் தவெக

பள்ளிப் பிள்ளைகளுக்கு பால், முட்டை வழங்கும் திட்டம்! - மகளிர் வாக்குகளை மடைமாற்றும் தவெக
Updated on
2 min read

உறுப்பினர் சேர்க்கை, வாக்காளர் பட்டியலில் ஆள் சேர்த்தல், வெள்ள நிவாரண உதவிகள் என தேர்தலைக் குறிவைத்து நடிகர் விஜய்யின் தவெக கட்சியினர் பம்பரமாய் சுழன்று வருகிறார்கள். கூடவே, வாக்காளர்களை கவரும் விதத்தில் குறிப்பாக, பெண்களை கவரும் விதத்தில் மக்கள் நல திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றனர். அதில் ஒன்றுதான் ஞாயிறு தோறும் பள்ளிக் குழந்தைகளுக்கு விலையில்லா ரொட்டி, பால், முட்டை வழங்கும் திட்டம். தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் மூலம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், தற்போது தவெக-வின் திட்டமாக மாறி இருக்கிறது.

பயனாளி​களுக்கான அடையாள அட்டை சகிதம் செயல்​படுத்​தப்​பட்டு வரும் இந்தத் திட்டத்தின் மூலம் குழந்தைகளை வைத்து பெண் வாக்காளர்களை நெருங்கி வருகிறது தவெக. இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசியல் பார்வை​யாளர்கள், “நடிகர் விஜய் ரஜினிக்கு அடுத்​த​படியாக குழந்தை​களுக்கு பிடித்தமான நடிகராக உள்ளார். விலையில்லா ரொட்டி, பால், முட்டை வழங்கும் திட்டத்தின் மூலம் அந்தக் குழந்தை​களுக்கு இன்னும் பிடித்தமான மனிதராக அவர் மாறி வருகிறார். இப்படி ஈர்க்​கப்​படும் குழந்தைகள் தங்கள் வீட்டு பெரிய​வர்கள் மத்தியில் விஜய் கட்சிக்காக நிச்சயம் பிரச்​சாரம் செய்வார்கள்” என்றார்கள்.

சென்னை கிழக்கு மாவட்ட தவெக தலைவர் ஜி.பால​முருகன் நம்மிடம் பேசுகை​யில், “தலைவர் விஜய், கட்சி தொடங்கும் முன்பே மக்கள் நலம் சார்ந்த பணிகளை செய்யும்படி எங்களுக்கு வழிகாட்டி வந்தார். அதன்படி, அவரது பிறந்த நாளில் தமிழகம் முழுவதும் ஏழை - எளியோ​ருக்கு மளிகைப் பொருட்கள், பள்ளி மாணவர்​களுக்கு விளையாட்டு உபகரணங்கள், அரசுப் பள்ளி​களுக்கு கணினிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம்.

அதுமட்டுமல்​லாமல், தமிழகம் முழுமைக்கும் விலையில்லா விருந்​தகங்​களையும் நடத்தி வருகிறோம். சென்னை - அம்பத்தூர் பகுதியில் தினமும் காலையில் 100 பேருக்கு விலையில்லா விருந்​தகத்தில் சிற்றுண்டி வழங்கி வருகிறோம். இதுமட்டுமல்​லாது, ஞாயிறு தோறும் விலையில்லா ரொட்டி, பால், முட்டை வழங்கும் திட்டம், ரத்ததானத்தை ஊக்கு​விக்கும் குருதி​யகம், கண்தானத்தை ஊக்கு​விக்கும் விழியகம், ஏழை-எளிய மாணவர்​களுக்கு மாலை நேர இலவச வகுப்புகளை நடத்தும் பயிலகம், நூலகம் ஆகிய திட்டங்​களையும் செயல்​படுத்தி வருகிறோம்.

இதுவரை விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் செயல்​படுத்​தப்​பட்டு வந்த இந்தத் திட்டங்கள் தற்போது தவெக திட்டங்களாக மாறி இருக்​கின்றன. அம்பத்​தூர், மதுரவாயல், மாதவரம், ஆவடி ஆகிய 4 சட்டப்​பேரவை தொகுதி​களில் தற்போது 100 இடங்களில் ஞாயிறு தோறும் பள்ளி சிறுவர்- சிறுமியருக்கு விலையில்லா ரொட்டி, பால், முட்டை வழங்கும் திட்டம் செயல்​படுத்​தப்​பட்டு வருகிறது.

இதில் ஒவ்வொரு இடத்திலும் சுமார் நூறு பிள்ளை​களுடன் முதிய​வர்​களும் ரொட்டி, பால், முட்டை பெற்று பலனடைகின்​றனர். மக்களுக்கு எங்களால் முடிந்​ததைச் செய்ய​வேண்டும் என்ற எண்ணத்​தில்தான் இப்பணி​களைச் செய்து வருகிறோம். இதையும் எங்களது பொருளாதார வசதியைப் பொறுத்தே செய்ய​வேண்​டி​யுள்ளது. ஆட்சி அதிகாரம் இருந்​தால், எங்கள் தலைவரின் எண்ணப்படி, தனியாருக்கு நிகராக அரசு மருத்​துவ​மனை​களில் உயர்தர சிகிச்சை, அரசுப் பள்ளி​களில் தரமான கல்வி உள்ளிட்​ட​வற்றை வழங்க முடியும்” என்றார். ஒருவிரல் புரட்​சியைப் போல இன்னும் என்னவெல்லாம் கைவசம் வைத்திருக்​கிறாரோ விஜய்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in