

சென்னை: உலக கர்னாடக இசை கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பில், கர்னாடக இசையை ரசிக்கும் பள்ளி மாணவர்களை அடையாளம் காணும் திட்டத்தின் தொடக்க விழா மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் நாளை நடைபெற உள்ளது.
இதுகுறித்து கர்னாடக இசை கலைஞர்கள் கூட்டமைப்பின் தமிழ்நாடு பிராந்திய செயலாளர் நித்ய மகாதேவன் கூறியதாவது: கரோனா பேரிடருக்கு பிறகு, கர்னாடக இசை மீதான ஆர்வம் ரசிகர்களிடம் குறைந்துள்ளதை உணரமுடிகிறது. குறிப்பாக, இசை கச்சேரிகளை பார்ப்பதில் இளம் தலைமுறையினருக்கு ஆர்வம் இல்லை.
இதை கருத்தில் கொண்டு, நமது பாரம்பரியமான கர்னாடக இசையின் பெருமையை பள்ளி குழந்தைகளிடம் முறையாக எடுத்து சென்று, இயல்பாகவே கர்னாடக இசையை ரசிப்பதற்கான சூழலை ஏற்படுத்தும் (Create a Rasika - CAR) எனும்திட்டத்தை, உலக கர்னாடக இசை கலைஞர்கள் கூட்டமைப்பு முன்னெடுத்துள்ளது.
முதல் கட்டமாக, சென்னையை சுற்றியுள்ள 35 பள்ளிகளில் பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட்டன. இதில், கர்னாடக இசை குறித்த சுவாரஸ்யமான அறிமுகம், இசை தொடர்பான கலந்துரையாடல் நடத்தப்பட்டன. கர்னாடக இசை பற்றிய வீடியோ காட்சிகள் திரையிடப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, கர்னாடக இசை குறித்து மேலும் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடனும், கற்றுக்கொள்ள வேண்டும் என்ற துடிப்புடனும் இருக்கும் குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
அவர்கள் ‘கர்னாடக இசையின் தூதுவர்கள்’ என கவுரவிக்கப்படுவார்கள். சிறப்பாக செயல்படும் குழந்தைகளுக்கு இளம் கர்னாடக இசை ரசிகர் விருது வழங்கப்படும். மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் இத்திட்டத்தின் தொடக்க விழா டிசம்பர் 8-ம் தேதி (நாளை) காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. உலக கர்னாடக இசை கலைஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் சுதா ரகுநாதனின் வழி நடத்தலில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த கூட்டமைப்பில் சவுமியா, நெய்வேலி சந்தான கோபாலன், சிக்கில் குருசரண் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். துணை தலைவர் நிர்மலா ராஜசேகர், சசிகிரண் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கெடுக்கின்றனர். மேலும் விவரங்களுக்கு 9884568275, 9841049176 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.