Published : 09 Aug 2014 11:06 AM
Last Updated : 09 Aug 2014 11:06 AM

2,944 விஏஓ பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவிப்பு

தமிழகத்தில் நடப்பாண்டில் 2,944 கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பணியிடங்கள் நிரப்பப்படும். மேலும், நடப்பாண்டில் 3 லட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

சட்டப்பேரவையில் வருவாய்த்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து வெள்ளிக்கிழமை பேசுகையில் அவர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:

வீட்டுமனை இல்லாத ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இந்நிதியாண்டில் 3 லட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும்.

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வருவாய் உதவியாளர்களாகப் பதவி உயர்வு வழங்குவதற்கு 10 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையைத் தளர்த்தி, 8 ஆண்டுகளாகக் குறைக்கப்படும். அதுபோன்ற பதவி உயர்வுக்கான மொத்த ஒதுக்கீடு 10-ல் இருந்து 30 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

3,672 முன்னாள் விஏஓ-க் களுக்கு வழங்கப்படும் ரூ.1,500 ஓய்வூதியம், 2 ஆயிரமாகவும், குடும்ப ஓய்வூதியம் பெறும் 852 முன்னாள் கிராம அலுவலர் குடும்பங்களுக்கான ஓய்வூதியம் ரூ.1,000-த்தில் இருந்து ரூ.1,500 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி நிலவரப்படி, காலியாக உள்ள 2,944 விஏஓ பணியிடங்கள் நடப்பாண்டில் நிரப்பப்படும்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று மற்றும் 10 வருடங்கள் கிராம உதவியாளராக பணிமுடித்து தற்போது தகுதியாக உள்ள கிராம உதவியாளர்களுக்கு, விஏஓ பதவியில் காலியாக உள்ள பணியிடங்களில் 20 சதவீதம் பதவி உயர்வு அளித்து நிரப்பப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x