Published : 06 Dec 2024 10:32 AM
Last Updated : 06 Dec 2024 10:32 AM

விஜய் பங்கேற்கும் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை தவிர்த்தது ஏன்? - திருமாவளவன் விளக்கம்

விசிக தலைவர் தொல்.திருமாவளவன்

சென்னை: ‘யாதுமுணர்ந்தே தவிர்த்தோம்; பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம்’ என நடிகர் விஜய் பங்கேற்கும் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை தவிர்த்தது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் இன்று (டிச.6-) நடக்கவிருக்கும் ‘அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில், பங்கேற்காதது குறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கை: “‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல், புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளான இன்று (டிச.6) சென்னையில் வெளியிடப்படுகிறது. 36 பேரின் கட்டுரைகள் தொகுக்கப் பெற்று இந்நூல் வெளிவருகிறது. இதில் என்னுடைய நேர்காணலும் இடம்பெற்றுள்ளது.

இந்நூலின் வெளியீட்டு விழா கடந்த ஏப்ரல்14 - புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில் நடைபெறுவதாக முதலில் திட்டமிடப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிடுவதாகவும் நான் பெற்றுக்கொள்வதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், அந்நிகழ்வு திட்டமிட்டவாறு நடைபெறாமல் தள்ளிப்போனது.

அதன்பின்னர், நடிகர் விஜய் பங்கேற்க இசைவளித்துள்ளார் என சொல்லப்பட்டது. அவரது கட்சியின் விக்கிரவாண்டி மாநாடு நடைபெறுவதற்கு முன்பு அவ்வாறு சொல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாமலும் அழைப்பிதழ் அச்சிடப்படாமலும் இருந்த சூழலாகும். நடிகர் விஜய் இந்நிகழ்வில் பங்கேற்கவிருக்கிறார் என்பது ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட எங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.

ஆனால், திடுமென ஒரு தமிழ் நாளேடு இதனை பெரிய செய்தியாக - தலைப்புச் செய்தியாக வெளியிட்டது. விஜய் கட்சி மாநாட்டுக்குப் பிறகு அவ்வாறு வெளியிட்டது. அதாவது, "டிசம்பர்-06, விஜய் - திருமா ஒரே மேடையில்" என தலைப்புச் செய்தி வெளியிட்டு, ஒரு நூல் வெளியீட்டு விழாவை பூதாகரப்படுத்தி அந்நாளேடு அதனை அரசியலாக்கியது. இதுதான் அவ்விழாவைப் பற்றிய 'எதிரும் புதிருமான' உரையாடல்களுக்கு வழிவகுத்தது. பல்வேறு யூகங்களுக்கும் இடமளித்தது. குறிப்பாக, மரபு ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் அவை கூட்டணி தொடர்பான உரையாடல்களாக அரங்கேறின.

ஒரு நூல் வெளியீட்டு விழாவாக, அமைதியாகவும் வெற்றிகரமாகவும் நடந்தேறியிருக்க வேண்டிய நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூசியது ஏன்? அந்த நாளேட்டு நிறுவனத்துக்கு அப்படி என்ன உள்நோக்கம் இருக்கமுடியும்? இவ்வினா எழுவது இயல்பேயாகும். திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையிலுள்ள நட்புறவில் ஐயத்தைக் கிளப்பி, கருத்து முரண்களை எழுப்பி, திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதும், அதன் மூலம் கூட்டணியில் விரிசலை உருவாக்குவதும்தான் அதன் உள்நோக்கமாக இருக்கமுடியும்.

‘திமுகவைத் தனது அரசியல் எதிரி என வெளிப்படையாகப் பேசியும், 'திராவிட முன்மாதிரி அரசு' என்பதைக் கடுமையாக விமர்சித்தும் தனது மாநாட்டில் உரையாற்றியுள்ள விஜய்யோடு, உங்கள் கூட்டணியிலுள்ள திருமாவளவன் ஒரே மேடையில் ஏறப் போகிறார் பாருங்கள்’ என திமுக தொண்டர்களுக்குச் செய்தி சொல்வதும்; அதனடிப்படையில் என் மீதான அரசியல் நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்கு உள்ளாக்குவதும் தான் அந்த நாளேட்டின் நோக்கமென்பது வெளிப்படுகிறது.

இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு அரசியல் உள்நோக்கம் கற்பித்து அதனைப் பூதாகரப்படுத்திய அந்த நாளேட்டின் சதி அரசியல் பற்றி ஏன் ஒருவரும் வாய் திறக்கவில்லை? திமுக கூட்டணியை உடைக்க வேண்டுமென்கிற செயல் திட்டத்தோடு நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் ஏதேதோ பிதற்றிக் கொண்டிருப்பவர்கள். இவர்களில் யாரும், அந்தப் பதிப்பகம் ஏன் ஏற்கெனவே இசைவளித்த திருமாவளவனை விட்டு விட்டு நிகழ்ச்சியை நடத்திட முடிவெடுத்தது என்கிற கேள்வியை எழுப்பவில்லை.

‘விஜய் போதும்; திருமா தேவையில்லை’ என்கிற முடிவை அந்த வார இதழால் எப்படி எடுக்க முடிந்தது? அதற்கு என்ன காரணமாக இருக்கமுடியும் என்று எவரும் அலசவில்லை. விஜய்யை மிகப் பெரிய சக்தியாகவும், நம்மை ஒரு "துக்கடா" வாகவும் எடைபோடுகிறவர்களால் எவ்வாறு நமக்காக வாதிட முடியும்? "தான் பங்கேற்காவிட்டாலும் பரவாயில்லை; விஜய் பங்கேற்கட்டும்" என திருமாவளவன் பெருந்தன்மையோடு ஒதுங்கியிருக்கிறார் என்று பேசுவதற்கு இங்கே யாருண்டு?

என்னை ஒரு கருவியாகக் கொண்டு தமிழக அரசியல் களத்தில் அரசியல் எதிரிகள் காய் நகர்த்தப் பார்க்கிறார்கள் என்பதை அறிந்த பின்னர், எங்ஙனம் நான் அதற்கு இடம் கொடுக்க இயலும்?

நமக்கென்ன ஆதாயம் என்று கணக்குப் பார்க்காமல், நமது கொள்கை பகைவர்களின் சூது- சூழ்ச்சிக்குப் பலியாகி, அவர்களின் நோக்கம் நிறைவேற இடமளித்துவிடக் கூடாதென்கிற எச்சரிக்கை உணர்வோடு தானே நாம் முடிவெடுக்க இயலும்!

"ஆதவ் அர்ஜூன் கட்டுப்பாட்டுக்குள் சிக்கியிருக்கிறார் திருமா; அதனால்தான் அவர்மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார் " என்று சொல்லுகிற அதே நபர்கள் தாம்,-- "திமுகவுக்கு அஞ்சுகிறார் அதனால்தான் இந்த நிகழ்வில் பங்கேற்காமல் திருமா தவிர்த்து விட்டார் " என்றும் முன்னுக்குப்பின் முரணாகப் பேசுகின்றனர்.

ஆதவ் அர்ஜூன் கட்டுப்பாட்டில் திருமா இருப்பது உண்மையெனில், அவர் அழைத்தும்கூட ஏன் திருமா இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என்கிற கேள்வி எழுவதும் இயல்புதானே? அதேபோல, திமுக அவரை அச்சுறுத்துவது உண்மையாக இருந்தால், அதற்குப் பணிந்து ஆதவ் அர்ஜூனா மீது அவர் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிற கேள்வி எழுவதும் இயல்புதானே? ஆனால், அப்படியெல்லாம் அவர்களில் யாரும் இங்கே சிந்திக்கமாட்டார்கள்.

‘திருமாவை யாரும் அப்படி கட்டுக்குள் வைத்திருக்க முடியாது; அவர் சுதந்திரமாகவும் துணிவாகவும் முடிவெடுக்க கூடியவர்’ என்றெல்லாம் யாரும் இங்கே நமக்காக வாதாடவும் மாட்டார்கள்.

கடந்த கால் நூற்றாண்டு காலத் தேர்தல் அரசியலிலும் அதற்கு முன்னர் பத்தாண்டு காலத் தேர்தல் புறக்கணிப்பு அரசியல் களத்திலும் எத்தனை எத்தனை அடக்குமுறைகளையும் அச்சுறுத்தல்களையும் நாம் எதிர் கொண்டிருப்போம்? எனவே, யாதுமுணர்ந்தே தவிர்த்தோம்! - பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம்!” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x