

கிருஷ்ணகிரி: ஃபெஞ்சல் புயல் மழையால் தமிழகத்தில் 3 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கியதாக வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் கூறினார்.
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: ஃபெஞ்சல் புயலால் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 3 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் நீரால் சூழப்பட்டுள்ளன. பாதிப்புகளை கணக்கெடுக்கும் பணியில் வேளாண் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கணக்கெடுப்பு முடிவில் பாதிப்பு எவ்வளவு என்பது துல்லியமாகத் தெரியவரும்.
'நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு. வெள்ளத் தடுப்பு பணியில் மெத்தனம் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசிவருவது அர்த்தமற்றது.
ஏனெனில், திமுக ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள்தான் ஆகின்றன. அதற்கு முன்னர் 10 ஆண்டுகள் ஆட்சி செய்தது அதிமுகதான். நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டதும் அப்போதுதான். நீதிமன்ற உத்தரவுபடி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறோம்.
வெள்ளப் பாதிப்புகள் தொடர்பாக மத்தியக் குழுவும் ஆய்வை மேற்கொண்டு வருகிறது. பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு பணிகள் முடிந்த பின்னர், நிவாரணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார். சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன், தருமபுரி எம்.பி. மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.