சிறப்பு சுய உதவிக் குழுக்கள் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.59 கோடி கடனுதவி

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: சிறப்பு சுய உதவிக் குழுக்கள் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.59 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மகளிர் சுய உதவிக் குழுக்களை போலவே, ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் மாற்றுத் திறனாளிகள், முதியோர், நலிவுற்றோர் மற்றும் திருநங்கையர்களை உறுப்பினர்களாக கொண்ட சிறப்பு சுய உதவிக் குழுக்கள் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 8,336 சிறப்பு சுய உதவிக் குழுக்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன.

இதில் 3,274 குழுக்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.59.32 கோடி கடனுதவியாக தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி சிறப்பு சுய உதவிக் குழுக்களின் மூலம் உறுப்பினர்களாக உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு நலிவுற்றோர் மேம்பாட்டு நிதியாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை தனிநபர் கடன் வழங்கப்படுகிறது. அந்தவகையில் தனிநபர் வாழ்வாதார நிதியாக 2,410 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.9.62 கோடி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் தொழில் மேம்பாட்டு நிதியாக 1,552 சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.6.92 கோடி வழங்கப்பட்டு உள்ளது. சிறப்பு சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் நிதியானது, அவர்களின் உணவு பாதுகாப்புக்கும், வாழ்வாதார செயல்பாடுகளுக்கும், உடல் நலக் குறைவு அல்லது எதிர்பாரா மருத்துவ செலவினங்களுக்கும் மற்றும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டோரின் மறுவாழ்விற்கும் பயன்படுத்தப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in