மும்பையில் அம்பேத்கர் நினைவிடத்தை பிரதமர் விரைவில் திறந்து வைக்கிறார்: விசிக தலைவர் திருமாவளவன் தகவல்

மும்பையில் அம்பேத்கர் நினைவிடத்தை பிரதமர் விரைவில் திறந்து வைக்கிறார்: விசிக தலைவர் திருமாவளவன் தகவல்
Updated on
1 min read

மும்பையில் உள்ள அம்பேத்கர் நினைவிடமான ‘சைத்யபூமி’ பல ஏக்கர் பரப்பளவி்ல் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதை பிரதமர் மோடி விரைவில் திறந்து வைக்க உள்ளார் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அம்பேத்கர் நினைவு தினத்தில், சனாதனத்தை முறியடிக்க உறுதியேற்போம் என்றும் கூறியுள்ளார்.

அம்பேத்கர் நினைவு தினம் நாளை (டிச.6) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, விசிக தொண்டர்களுக்கு கட்சி தலைவர் திருமாவளவன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

சட்ட மேதை அம்பேத்கர் காலமாகி 68 ஆண்டுகள் ஆகிவிட்டன. மும்பையில் உள்ள சைத்யபூமி எனும் அவரது நினைவிடம் பல ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. அங்கு 350 அடி உயரத்தில் அவரது வெண்கல சிலை நிறுவப்படுகிறது.

இத்துடன் அவரது பெருவாழ்வை விவரிக்கும் கண்காட்சியகம், ஆராய்ச்சி மாணவர்களுக்கான மாபெரும் நூலகம், கணினி மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான தொழில்நுட்ப ஆய்வகம் உள்ளிட்டவை கட்டமைக்கப்பட்டு வருகின்றன. இதை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் திறந்து வைக்க உள்ளார்.

அம்பேத்கர் 65 வயதிலேயே காலமாகிவிட்டார். தேடித் தேடி நூல்களை கற்பதிலும், ஆய்ந்து ஆய்ந்து நூல்களை படைப்பதிலும் அவரிடம் தீவிர வெறி இருந்தது. அரசமைப்பு சட்டம் மற்றும் ‘புத்தமும் அவரது தம்மமும்’ என்ற நூல் ஆகிய இரண்டும் அம்பேத்கர் எனும் பேராற்றலின் பெருங்கொடைகள். இவை தீயவற்றை எரிக்கும் தூயவை. ஜனநாயக அறத்தை காக்கும் பேரரண். இந்த இரண்டையும் குறிவைத்துள்ள சனாதனத்தை அடையாளம்கண்டு, அதை முறியடிக்க அவரது நினைவு தினத்தில் உறுதியேற்போம். அவரது ஞான பேராயுதங்களை ஏந்துவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in