“திமுகவுடன் இபிஎஸ் மறைமுக கூட்டணி” - தினகரன் குற்றச்சாட்டு

டிடிவி தினகரன் | கோப்புப்படம்
டிடிவி தினகரன் | கோப்புப்படம்
Updated on
2 min read

தஞ்சாவூர்: “திமுக தேர்தல் வெற்றிக்கு மறைமுகமாக துணை போகிறார் எடப்பாடி பழனிசாமி. தான் செய்த ஊழல், வழக்குகள், கைது நடவடிக்கைகள், கொலை, கொள்ளை குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக திமுகவுடன் மறைமுகமாக கள்ளக் கூட்டணி வைத்து இருக்கிறார்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தஞ்சாவூரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (டிச.4) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “ஃபெஞ்சல் புயலால் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. முதலில் தஞ்சாவூர் மாவட்டம் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. நல்வாய்ப்பாக தஞ்சாவூர் மாவட்டம் தப்பித்துக் கொண்டது. ஆனாலும் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சாத்தனூர் அணையிலிருந்து கவனக்குறைவாக தண்ணீர் திறந்துவிட்டதால் தான் தென்பெண்ணை ஆற்றில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. மழை பெய்தால் ஒரு சொட்டு தண்ணீர் கூட நிற்காது என தமிழக முதல்வர் கூறினர். ஆனால், திருவண்ணாமலை அருகில் ரூ.15 கோடியில் கட்டப்பட்டு, 3 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட ஒரு பாலம் இடிந்துவிட்டது. இதுதான் இந்த திராவிட மாடல் ஆட்சிக்கு ஓர் உதாரணம்.

தமிழகத்தில் ஊழல் முறைகேடுகள் நிறைந்துள்ளது.தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இளைஞர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரையும் குறிவைத்து இன்றைக்கு கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. கூலிப்படைகள் அதிகரித்து வருகிறது. கட்டணம், வரி உயர்வு போன்றவைகளால் திமுக ஆட்சியில் மக்கள் அவதிப்படுகின்றனர்.

ஜனநாயக நாட்டில் யாருக்கும் கட்சி தொடங்குவதற்கும், தேர்தலில் பங்கேற்பதற்கும் உரிமை உள்ளது. மக்கள்தான் தீர்ப்பு வழங்கும் எஜமானர்கள். அவர்களுடைய மதிப்பீடு என்ன என்பது தேர்தலில்தான் தெரியும். அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட சம்பவம், திராவிட மாடல் ஆட்சியின் உதாரணம். இதுதான் தமிழக மக்களுடைய மனநிலை. இதைவிட தெளிவாக யாரும் காண்பிக்க முடியாது.

நாளை (டிச.5) ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி திமுக மக்கள் விரோத ஆட்சியை, தீய சக்திகளாக இருக்கின்ற இந்த ஆட்சியை அகற்றிவிட்டு உண்மையான ஜெயலலிதாவின் ஆட்சியைக் கொண்டு வருவதற்கான உறுதிமொழியை ஏற்க இருக்கிறோம். திமுக தேர்தல் வெற்றிக்கு மறைமுகமாக துணை போகிறார் எடப்பாடி பழனிச்சாமி. தான் செய்த ஊழல், வழக்குகள், கைது நடவடிக்கைகள், கொலை, கொள்ளை குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, திமுகவுடன் மறைமுகமாக கள்ளக் கூட்டணி வைத்து இருக்கிறார். இதுதான் உண்மை.

அதானியாக இருந்தாலும் சரி, யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மழை, புயல் பாதிப்புகளுக்கு வழங்கும் நிவாரணத்தை புதுச்சேரி மாநிலம் வழங்கியது போல் உயர்த்தி வழங்க வேண்டும். 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும்” என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in