புயல் மீட்பு பணிகளை ‘இடைத்தேர்தல்’ பாணியில் அரசு செய்யாதது ஏன்? - விசிக கேள்வி

ஆதவ் அர்ஜுனா | கோப்புப் படம்
ஆதவ் அர்ஜுனா | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: புயல் மீட்பு பணிகளை இடைத்தேர்தல் பாணியில் அரசு இயந்திரம் ஏன் ஒருங்கிணைக்கவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட அறிக்கையில், “கடந்த பத்தாண்டுகளாக தமிழகம் தொடர்ந்து இயற்கை சீற்றங்களைச் சந்தித்து வருகிறது. ஆனால், அதை எதிர்கொள்ளும் கட்டமைப்புகளை மேற்கொள்ளாதது வருத்தத்துக்குரியது. அதேநேரம், மோசமான இயற்கை பாதிப்புகளை எதிர்கொள்ளும் ஒடிசா மாநிலம் முறையான கட்டமைப்பு வசதிகளையும் மக்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறை திட்டங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், தமிழகத்திலோ ஒவ்வொரு முறையும் இயற்கை சீற்றத்தால் மக்கள் பாதிக்கப்படுவதும் அதற்கு அரசு காரணங்களை மட்டும் சொல்வதுமே வாடிக்கையாக உள்ளது.

இதற்கு மனித உயிர்கள் பலியாகியிருப்பதோடு உணவு, உடை போன்ற அடிப்படைத் தேவைக்கே மக்கள் கை ஏந்தும் நிலைமை பெருந்துயர். எனவே, அரசு போர்க்கால அடிப்படையில் பணிகளை முடுக்கிவிட வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவி மையங்களை உருவாக்கி அதன் மூலம் தன்னார்வலர்கள் உட்பட அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும். ஓர் இடைத்தேர்தல் வந்தால் ஆளும் தரப்பு 20 பூத்துக்கு ஒரு அமைச்சர், எம்பி என்று பொறுப்பாளர்களை நியமித்து பம்பரம் போல் களப்பணியை மேற்கொள்வார்கள். இவ்வாறு இடைத்தேர்தல் பாணியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை தேவைகளை தீர்க்கும் பணியில் அரசு இயந்திரம் ஏன் செயல்படவில்லை?.

முழு அமைச்சரவையும் இந்த பணியில் பங்கெடுப்பதே அவசியம். குறிப்பாக கிளை, ஊராட்சி அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்து அடிப்படைத் தேவைகளுக்காக கையேந்தி நிற்கும் ஏழை, எளிய மக்களின் துயரை அரசு விரைந்து துடைக்க வேண்டும். மருத்துவக் குழுக்களை நியமித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in