கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரம்: அவசர சிகிச்சை பிரிவில் சேவையாற்ற உத்தரவிட்டு 4 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரம்: அவசர சிகிச்சை பிரிவில் சேவையாற்ற உத்தரவிட்டு 4 பேருக்கு நிபந்தனை ஜாமீன்
Updated on
1 min read

சென்னை: மாநிலக் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 4 பேருக்கு அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேவையாற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாநிலக் கல்லூரி மாணவரான திருத்தணியைச் சேர்ந்த சுந்தரை, கடந்த அக்.4-ம் தேதியன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சரமாரியாக தாக்கினர். சுந்தரை அவர்களிடமிருந்து மீட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.

கடந்த அக்.9-ம் தேதியன்று அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கைதான மாணவர்கள் சந்துரு, ஈஸ்வரன், ஈஸ்வர், யுவராஜ் ஆகிய 4 பேரும் தங்களுக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பாக கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது ஜாமீன் கோரிய மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து அவர்களுக்கும், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கும் நீதிபதி அறிவுரை கூறினார்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது 2 மாணவர்கள் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவிலும், 2 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவிலும் மறுஉத்தரவு வரும் வரை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மருத்துவ ஊழியர்களுடன் இணைந்து நோயாளிகளுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டு விசாரணையை டிச.20-க்கு தள்ளிவைத்தார். மேலும், அன்றைய தினம் பச்சையப்பன் மற்றும் மாநிலக் கல்லூரியின் முதல்வர்கள் இருவரும் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in