Published : 21 Jun 2018 09:58 PM
Last Updated : 21 Jun 2018 09:58 PM

நீதித்துறை குறித்து தங்க தமிழ்செல்வன் விமர்சனம்; சர்ச்சை வெடிக்கிறது: நீதிபதி கிருபாகரன் வேதனை

நீதித்துறையைச் சேர்ந்தவர்களே, நீதிபதிகளை விமர்சிப்பது என்பது நீதித்துறையை தற்கொலைக்குத் தூண்டுவதற்குச் சமம் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார்.

தமிழக நீதித்துறை மீது தாக்குதல் நடத்தியுள்ள தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன் மீது சூமோட்டோவாக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ஜூன் 20-ம் தேதி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அவரது கடிதத்தில் கூறியிருப்பதாவது:

''எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை ஜூன் 14-ம் தேதி வழங்கியது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவான தங்க தமிழ்செல்வன் தங்களுக்கு எதிரான தீர்ப்பை வழங்கிய தலைமை நீதிபதியை விமர்சித்து பல பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் முன்வைத்து வருகிறார்.

குறிப்பாக தலைமை நீதிபதி பற்றிய குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன், அரசுக்கு ஆதரவான தீர்ப்பு வழங்குவதற்காக தலைமை நீதிபதி லஞ்சம் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் சென்னையில் மன்றம் இருப்பதாகவும் அதன் வெளிப்பாடாகவே தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே அரசிற்கு தீர்ப்பு விவரங்கள் தெரிந்துவிட்டது. அரசியலுக்கு ஏற்ப நீதிமன்றம் ஆடுவதாகவும் தங்க தமிழ்செல்வன் பேசியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் மேல் தனக்கு நம்பிக்கையில்லை என்றும், அதனால் தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறப் போவதாகவும் தங்க தமிழ்செல்வன் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த வழக்கை விசாரிக்க போகின்ற மூன்றாவது நீதிபதி தனக்கு எதிராக தீர்ப்பு வழங்குவதற்கு மாநில அரசால் உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் பேசியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம், அதன் நீதிபதிகள், தலைமை நீதிபதி என அனைவருக்கு எதிராகவும், அவர்களின் நேர்மையையும், ஒருமைப்பாட்டையும், கண்ணியத்தையும் குலைக்கும் வகையில் தங்க தமிழ்செல்வன் பேசியுள்ளார். இதை நீதித்துறை மீதான உச்சபட்ச தாக்குதலாகக் கருதவேண்டும்.

இந்த வழக்கை விசாரிக்கப் போகின்ற மூன்றாவது நீதிபதியான நீதிபதி எஸ்.விமலா இந்த வழக்கில் விசாரித்து தீர்ப்பளிப்பதிலிருந்து பின் வாங்க வேண்டும் என்ற தங்க தமிழ்செல்வன் விருப்பப்படுகிறார். நீதித்துறை குறித்து தவறாக சித்தரித்து நீதித்துறையை கேலிக்கூத்தாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட தங்க தமிழ்செல்வன் மீது சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் பேச்சு தொடர்பாக என்னிடம் உள்ள ஆதாரங்கள் அனைத்தையும் தரத் தயாராக இருக்கிறேன்” என கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

இந்தக் கடிதம் குறித்து, நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் ஆஜராகி முறையிட்டார். அப்போது, நீதிதுறையும், நீதிபதிகளையும் அவதூறாக விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து, தங்க தமிழ்செல்வன் அளித்த பேட்டி, தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி, நேர்காணல் காட்சிகள் அடங்கிய குறுந்தகட்டையும் நீதிபதியிடம் வழங்கினார்.

இதனை தலைமை நீதிபதி கவனத்துக்குக் கொண்டு செல்வதாக நீதிபதி தெரிவித்தார். மேலும், தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் நீதித்துறை சார்ந்த வழக்கறிஞர்களே தீர்ப்பு குறித்தும், நீதிபதிகள் குறித்தும் விமர்சிப்பதைத் தடுக்காவிட்டால் நீதித்துறையின் தற்கொலைக்கு வழிவகுத்துவிடும் என நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x