ஹெச்.ராஜாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை: அவதூறு வழக்கில் குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

ஹெச்.ராஜா | கோப்புப்படம்
ஹெச்.ராஜா | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: பெரியார் சிலை உடைப்பு கருத்து மற்றும் திமுக எம்.பி. கனிமொழி குறித்து விமர்சனம் செய்ததாக தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவுக்கு எதிராக தொடரப்பட்ட இரண்டு வழக்குகளில் தலா 6 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னையில் உள்ள எம்.பி. - எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஹெச்.ராஜா கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெரியார் சிலையை உடைப்பேன் என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்ததாகவும், 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் திமுக எம்.பி. கனிமொழியை விமர்சித்து எக்ஸ் தளத்தில் கருத்துக்களைப் பதிவிட்டிருந்ததாகவும், ஈரோடு நகர காவல்துறை, மற்றும் கருங்கல்பாளையம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குகளை, சென்னையில் உள்ள எம்.பி. - எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் விசாரித்து வந்தார். இந்த விசாரணையின்போது, பெரியார் சிலையை தான் உடைப்பேன் என்று பேசியதற்கு ஆதாரங்கள் இல்லை எனவும், திமுக எம்.பி. கனிமொழி குறித்த கருத்து அரசியல் ரீதியானது எனவும், ஹெச். ராஜா தரப்பில் வாதிடப்பட்டிருந்தது. மேலும், இந்த விவகாரம் குறித்து திமுக எம்.பி. கனிமொழி புகார் அளிக்காத நிலையில், மூன்றாம் நபர் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்றும் வாதிடப்பட்டிருந்தது. வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஜெயவேல், இந்த வழக்கில், காவல்துறை தரப்பில் குற்றச்சாட்டு நிரூபிக்க பட்டுள்ளது. இரண்டு பதிவுகளும் ஹெச். ராஜாவின் சமூக வலைதள பக்கத்தில் இருந்து அனுப்பபட்டது என்பதை இந்த நீதிமன்றம் தீர்மானித்து, ஹெச்.ராஜா குற்றவாளி என இந்த நீதிமன்றம் தீர்மானிக்கிறது. அவருக்கு, இந்த இரண்டு வழக்குகளிலும் ஹெச்.ராஜாவுக்கு தலா 6 மாதம் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை நிறுத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in