மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசை கோரியது திமுகதான்: அண்ணாமலை குற்றச்சாட்டு

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசை கோரியது திமுகதான்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Updated on
1 min read

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசை கோரியது திமுக தான் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் அண்ணாமலை கூறியிருப்பதாவது: மதுரையில் டங்ஸ்டன் உலோகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான சுரங்கம் அமைக்க, தமிழக அரசு, மத்திய அரசின் அனுமதியைக் கோரி இருப்பதாகவும், தமிழக கனிம வளத் துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாக கடந்த 2023-ம் ஆண்டு ஊடகத்தில் செய்திகள் வெளிவந்தன.

மத்திய அரசின் சுரங்கத் துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2024 பிப்ரவரி மாதம் மதுரையில் டங்ஸ்டன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பகுதியில் சுரங்கம் அமைக்க ஒப்பந்தப் புள்ளி அறிவிப்பதற்கு முன்பாக, தமிழக அரசு கொடுத்த குறிப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டன என்றும், ஒப்பந்தப் புள்ளி வெளியிட்ட பிப்ரவரி மாதம் முதல், ஒப்பந்தம் வழங்கப்பட்ட 2024-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி வரையிலான பத்து மாதங்கள், தமிழக அரசு இந்த ஒப்பந்தம் குறித்தோ, சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கவோ மத்திய அரசைத் தொடர்புகொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதும் திமுக அரசுதான். சுரங்க ஒப்பந்தம் வெளியிடக் குறிப்புகள் கொடுத்ததும் திமுக அரசுதான். கடந்த 10 மாதங்களாக இதை வெளியில் தெரியாமல் மறைத்து வைத்திருந்த திமுக அரசு, தற்போது எதிர்ப்பு வருவதும், இதுகுறித்து தங்களுக்கு எதுவுமே தெரியாததுபோல நாடகமாடுகிறது.

டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் ஒப்பந்தத்தில் தெரியாமல் கையெழுத்து போட்டுவிட்டேன் என்று பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அரங்கேற்றிய அதே நாடகத்தை தற்போது மீண்டும் அரங்கேற்றத் துடிக்கிறார் முதல்வர் ஸ்டாலின். திமுகவின் நாடகம் பொதுமக்களிடம் இனியும் எடுபடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in