ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: விழுப்புரம் கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் பொன்முடி ஆய்வு

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: விழுப்புரம் கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் பொன்முடி ஆய்வு
Updated on
1 min read

விழுப்புரம்: விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையில் இன்று அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் கூறியதாவது: ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம் மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்திடும் வகையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் மின்பாதிப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை சீர் செய்ய முதல்வரின் உத்தரவின் பேரில் வர உள்ளார்கள்.

மாவட்டத்தில், கனமழை காரணமாக 11 இடங்களில் சுவர் இடிந்து விழுந்துள்ளது. 51 இடங்களில் மின் கம்பங்கள் விழுந்துள்ளன. 23 மரங்கள் விழுந்தன. இதில் 18 மரங்கள் அகற்றபட்டுள்ளன. எஞ்சிய மரங்கள் அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2 ஆடுகளும், 5 மாடுகளும் இறந்துள்ளன. மனித உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

21 புயல் பாதுகாப்பு மையங்களில் 1,281 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சில முகாம்கள் அமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்துள்ளதாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக செஞ்சி வட்டத்தில் 43 பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. எனவே, மழை பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

அப்போது எம்எல்ஏக்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், நகர் மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் யோகஜோதி, விழுப்புரம் கோட்டாட்சியர் முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in