Published : 13 Jun 2018 10:33 AM
Last Updated : 13 Jun 2018 10:33 AM

சென்னையில் தொடர் வழிப்பறி புகார்: விடிய விடிய போலீஸார் சோதனை; சந்தேகத்தின்பேரில் 2,500 பேர் ஒரே இரவில் பிடிபட்டனர்

தொடர் வழிப்பறி எதிரொலியாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு போலீஸார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். 2,500 பேர் ஒரே இரவில் பிடிபட்டனர்.

சென்னையில் ஒரே நாளில் அடுத்தடுத்து 14 வழிப்பறி, செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து குற்றங்களை முற்றிலும் கட்டுப்படுத்த காவல்துறை அதிகாரிகளுக்கு ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

அதன்படி, கூடுதல் காவல் ஆணையர்கள் எச்.எம்.ஜெயராம் (சென்னை வடக்கு), எம்.சி.சாரங்கன் (தென் சென்னை) தலைமையில் 2 ஆயிரம் போலீஸார் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வாகன சோதனையும் நடைபெற்றது.

தங்கும் விடுதிகளில் சோதனை

சென்னையில் உள்ள 135 காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமைக் காவலர்கள் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். குறிப்பாக 740 தங்கும் விடுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், சந்தேகத்தின்பேரில் 300 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதேபோல் ரவுடிகள் 1,125 பேர், குற்ற பின்னணி உடைய 1,325 பேர், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 32 பேர், தலைமறைவு குற்றவாளிகள் 15 பேர், ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிச் சென்ற 159 பேர் என 2,497 பேர் பிடிபட்டனர்.

மேலும் 9,748 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது. இதில், முறையான ஆவணங்கள் இல்லாத 69 வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டன.

இதற்கிடையில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து உதவி ஆய்வாளர் சம்பத் முகத்தில் ஒரே பைக்கில் வந்த 3 பேரில் ஒருவர் பிளேடால் கிழித்து விட்டு தப்பினார்.

இதேபோல் சென்னையில் நள்ளிரவில் அதிவேகமாக ஓட்டிச் செல்லப்பட்ட 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x