

தாம்பரம்-நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் உட்பட 10 சிறப்பு ரயில்களின் சேவை காலத்தை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வேயில் முக்கிய வழித்தடங்களில் பயணிகளின் தேவை அடிப்படையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து, இவற்றின் சேவை காலம் நீட்டிப்பு செய்யப்படுகின்றன.
அந்தவகையில், தாம்பரம் - நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் உட்பட 10 சிறப்பு ரயில்களின் சேவைக் காலத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் விவரம்:
நாகர்கோவில்-தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயிலின் (எண்: 06012) 10 சேவைகள் டிச. 1 முதல் பிப். 2-ம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளன. மறுமார்க்கமாக, தாம்பரம்-நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயிலின் (06011) 10 சேவைகள் டிச. 2 முதல் பிப். 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளன.
திருநெல்வேலி - சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு ரயிலின் (06070) 10 சேவைகள் டிச. 5 முதல் பிப். 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளன. மறுமார்க்கமாக, எழும்பூர் - திருநெல்வேலிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயிலின் (06069) 10 சேவைகள் டிச.6 முதல் பிப்.7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளன.
இதேபோல, தாம்பரம்-ராமநாதபுரம் வாரம் இருமுறை சிறப்பு ரயில் (06103), ராமநாதபுரம்-தாம்பரம் வாரம் இருமுறை சிறப்பு ரயில் (06104) உட்பட 6 சிறப்பு ரயில்களின் சேவைக் காலத்தை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.