

தாம்பரம் மாநகராட்சி பகுதி பெருங்களத்தூர், ராஜகீழ்ப்பாக்கம், பம்மல், அன்காபுத்தூர், குரோம்பேட்டை, சிட்லபாக்கம், பல்லாவரம் உள்ளிட்ட பல்வேறு தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்துள்ளதால் தரை தளத்தில் வசிப்போர் கடும் பாதிப்புக்கு உள்ளாகினார். வீடுகளுக்குள் முழங்கால் அளவுக்கு வீட்டுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
மேலும் மழைநீருடன் கழிவு நீர் கலந்து உள்ளதால் வீடு முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. சிலர் வீட்டுக்குள் புகுந்த தண்ணீரை பாத்திரங்களில் எடுத்து தெருவில் ஊற்றி வருகின்றனர். மழை நீரில் கழிவு நீரும் கலந்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சி சார்பில் மோட்டர் மூலம் மழை நீரை வெளியேற்றி வருகின்றனர்.
கோவளம், முட்டுக்காடு, கானத்தூர் ரெட்டிக்குப்பம், செம்மஞ்சேரி ஆகிய இடங்களில் கடற்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அதிக அளவில் நீர் தேங்கும் ஏரிகளான தையூர், சிறுதாவூர், கொண்டங்கி, தாழம்பூர், படூர், புதுப்பாக்கம், ஆமூர், மானாம்பதி, தண்டலம் ஆகிய ஏரிகளை 2 மணி நேரத்துக்கு ஒரு முறை கண்காணிக்குமாறு வருவாய்த் துறையினர் அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில் வருவாய்த் துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
படூர் ஊராட்சியில் வேம்புலி அம்மன் கோயில் தெரு, திடக்கழிவு மேலாண்மை கிடங்கு, கலைஞர் சாலை, இரண்டாம் பிரதான சாலை, ஓ.எம்.ஆர். சாலை, பசிபிகா குடியிருப்பு இணைப்பு சாலை உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கேளம்பாக்கம் ஊராட்சியில் சாத்தங்குப்பம் கிராமத்தில் ராஜேஸ்வரி நகர், தையூர் சாலை, மார்க்கெட் சாலை, கிருஷ்ணா நகர், அஜீத் நகர், சொக்கம்மாள் நகர், சீனிவாசா நகர், சண்முகா நகர், குமரன் நகர், சாமுண்டீஸ்வரி நகர், ஸ்ரீ நகர், ரேணுகாம்பாள் நகர், சுசீலா நகர், நந்தனார் நகர், கே.எஸ்.எஸ். நகர், ஆனந்தம் நகர், ராமமூர்த்தி நகர், கிரீன் உட் குடியிருப்பு, கே.கே. நகர், வி.ஐ.பி. நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் கனமழையின் காரணமாக வெள்ள நீர் தேங்கியது.
செம்மஞ்சேரி பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. முட்டுக்காடு படகு குழாமுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு அங்கு முகத்துவாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சேதம் அடையாத வகையில் பாதுகாப்பாக இடம் மாற்றப்பட்டு கரைகளில் நிறுத்தப்பட்டு இருந்தது.