Published : 12 Jun 2018 11:00 AM
Last Updated : 12 Jun 2018 11:00 AM

வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு குறைந்ததால் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை அடியோடு நிறுத்தம்: 6 ஒன்றியங்களில் 350-க்கு 66 இடங்களே நிரம்பின

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டாததால் இந்த ஆண்டு 20 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை அடியோடு நிறுத்தப்படுகிறது.

ஏற்கெனவே ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்துவிட்டு ஏறத்தாழ 2.5 லட்சம் பேர் அரசு வேலைக்காக காத்திருக்கிறார்கள். அவர்களில் 50,000-க்கும் மேற்பட்டோர் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2000-ம் ஆண்டு வரையில் பிளஸ் 2 முடித்து விட்டு 2 ஆண்டு கால இடைநிலை ஆசிரியர் பயிற்சியை முடிக்கும் மாணவ - மாணவிகளுக்கு அரசு பள்ளிகளில் உடனடியாக வேலை கிடைத்து வந்தது. அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கணிசமான வேலைவாய்ப்புகள் கிடைத்தன. 2000-ம் ஆண்டுக்குப் பின்னர் ஆசிரியர் பயிற்சியை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் மெல்ல மெல்ல குறையத் தொடங்கின.

முன்பு ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே பணிஅமர்த்தப்பட்டனர். ஆனால், காலப்போக்கில் 6 முதல் 8-ம் வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்களுக்குப் பதில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். ஏற்கெனவே அந்த வகுப்புகளில் பணியாற்றி வந்த இடைநிலை ஆசிரியர்கள் பணி ஓய்வுபெற்ற பின்னர் அப்பணியிடங்கள் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக மாற்றப்பட்டன. அது இன்றளவும் தொடர்கிறது.

அண்மைக்காலமாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதன் விளைவாக, ஆசிரியர் பணியிடங்களும் குறைந்து வருகின்றன. உபரியாக உள்ள ஆசிரியர்களை பணிநிர வல் என்ற பெயரில் வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யும் சூழல் தற்போது உருவாகியுள்ளது. ஒருகாலத்தில் ஆசிரியர் பயிற்சியில் சேர கடும் போட்டி இருந்தது.

கடும் போட்டி

பிளஸ் 2 தேர்வில் 1,200-க்கு 1,000-க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டுமே மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் இடம் கிடைக்கும் அளவுக்கு கடும் போட்டி நிலவியது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஆசிரியர் பயிற்சியில் சேரும் ஆர்வம் மாணவ -மாணவிகளிடம் அடியோடு குறைந்துவிட்டது.

கல்லூரிகளில் இடம் கிடைக்காதவர்களின் கடைசி புகலிடமாக ஆசிரியர் பயிற்சி படிப்பு மாறும் அளவுக்கு நிலைமை மோசமானது. விண்ணப்பித்தாலே போதும். இடம் உண்டு என்பதுதான் தற்போதைய நிலை.

அரசு ஒதுக்கீட்டு இடங்கள்

அரசு வேலைவாய்ப்பு குறைந்து வருவது, ஏற்கெனவே படித்து முடித்தவர்கள் வேலைவாய்ப்பின்றி இருப்பது என பல்வேறு காரணங்களால் தற்போது மாணவ - மாணவிகள் ஆசிரியர் பயிற்சியில் சேர ஆர்வம் காட்டுவதில்லை. கடந்த 2017-ம் ஆண்டு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், அரசு உதவி பெறும் நிறுவனம், தனியார் நிறுவனங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என அனுமதிக்கப்பட்ட 25,990 இடங்களில் வெறும் 6,710 இடங்களே நிரம்பின.

32 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 2,650 இடங்களில் 1,047 மட்டுமே பூர்த்தியாயின. அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 480 இடங்களில் வெறும் 113-ம், அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 3,360 இடங்களில் 459 மட்டுமே நிரம்பின. மொத்தமுள்ள 279 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள 19,150 இடங்களில் 3,419 இடங்களே பூர்த்தியானது.

மத்திய அமைச்சகம் நிதியுதவி

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நிதியுதவியுடன் கடந்த ஆண்டு காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் தொடங்கப்பட்ட 6 ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 350 இடங்களில் வெறும் 66 மட்டுமே நிரம்பின.

இந்த நிலையில், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்த காரணத்தினால் இந்த ஆண்டு 12 நிறுவனங்களில் மட்டும் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளவும் மற்ற நிறுவனங்களை பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் மையமாக மாற்றிடவும் பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி சென்னை, திருவண்ணாமலை, கடலூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, பெரம்பலூர், திருவாரூர், புதுக்கோட்டை, விருதுநகர், தேனி, நீலகிரி, திருநெல்வேலி ஆகிய 12 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 1,050 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மாணவர் சேர்க்கைக்காக அருகே உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் பயிற்சியை முடித்துவிட்டு சுமார் 2.5 லட்சம் பேர் அரசு வேலைவாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். அவர்களில் 50,000-க் கும் மேற்பட்டோர் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

77 தனியார் பயிற்சி நிறுவனங்கள் மூடல்

நடப்பு ஆண்டு 20 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் 4 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை குறைவு காரணமாக அவற்றின் நிர்வாகத்தினர் நிறுவனங்களை மூடுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.

வழக்கமாக ஆன்லைன் கலந்தாய்வுக்கு முன்பாக தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் கலந்தாய்வில் கலந்துகொள்வது தொடர்பாக விருப்பம் தெரிவித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், தற்போது மொத்தமுள்ள 279 தனியார் பயிற்சி நிறுவனங்களில் 77 நிறுவனங்கள் இதுவரை அதற்கு விண்ணப்பிக்கவில்லை. எனவே, அந்த 77 நிறுவனங்களும் மாணவர் சேர்க்கையை நிறுத்தலாம் என்று கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தினர் கருதுகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x