சென்னையில் தொடர் மழை: சுரங்கப் பாதைகளின் நிலை என்ன?

இடம்: பெரம்பூர் | படம்: ரகுநாதன்
இடம்: பெரம்பூர் | படம்: ரகுநாதன்
Updated on
1 min read

சென்னை: சென்னையில் எங்கெங்கே மழை நீர் தேங்கியுள்ளது என்றும், கனமழையால் எந்தெந்த சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஃபெஞ்சால் புயல் கரை கடக்க உள்ள நிலையில் சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. சென்னையில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களின் விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: “வட பழனி மற்றும் அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்கள் அருகே அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளது. மடிப்பாக்கம் நோக்கி செல்லும் மேடவாக்கம் நெடுஞ்சாலையில் சாலைகளில் வெள்ளம் நீர் சூழ்ந்துள்ளது. மறுபுறம் மெட்ரோ ரயில் பணிகளும் நடந்துவருகிறது” என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மழை பதிவு: “கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் நவம்பர் 30-ம் தேதி காலை 9 மணி வரை சென்னையில் மொத்தமாக 622.95 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக சனிக்கிழமை காலை 7 மணி முதல் 9 மணி வரை சராசரியாக 12.62 மி.மீ மழை பதிவாகியுள்ளது” என மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி நடவடிக்கைகள்: “300க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற 1,686 மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் 137 அதிக திறன் கொண்ட 100 ஹெச்பி பம்புகள் மற்றும் 484 டிராக்டர் பொருத்தப்பட்ட பம்புகள் அடங்கும். 134 இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதில் 8 இடங்களில் வடிகால் பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள 126 இடங்களில் மழை நீரை அகற்றம் பணிகள் நடைபெற்று வருகின்றன.சென்னையில் ஆறு சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன” என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சுரங்க பாதைகளின் நிலை என்ன?: “கெங்கு ரெட்டி சுரங்கப் பாதையில் மழை நீர் தேங்கியுள்ளதால் மூடப்பட்டுள்ளது. ஹாரிங்டன் மற்றும் லயோலா கல்லூரி சுரங்கப் பாதைகளில் மழை நீர் தேங்கவில்லை. ரங்கராஜபுரம் சுரங்கப் பாதை மூடப்பட்டுள்ளது. துரைசாமி சுரங்கப் பாதையில் மழை நீர் தேங்கவில்லை.

அரங்கநாதன் சுரங்கப்பாதை, சைதாப்பேட்டை மார்க்கெட், மீனப்பாக்கம் பகுதிகளில் உள்ள சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேக்கமில்லை. அதே சமயம் பழவந்தாங்கல் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும், ஆர்பிஐ சுரங்கப்பாதை, திருவொற்றியூர் அஜாக்ஸ் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாகவும், ஸ்டான்லி, சிபி சாலை சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கவில்லை எனவும் மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது. பெரம்பூர் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. சுந்தரம் பாயிண்ட், வில்லிவாக்கம் பகுதிகளில் சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கவில்லை.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in