

சென்னை: கனமழை, புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை விமான நிலையம் இன்று (நவ.30) மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நண்பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரை விமான நிலையம் மூடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபெஞ்சல்’ புயலாக வலுப்பெற்றுள்ளது. புயல் இன்று மாலை கரையைக் கடக்கும் என்று கணித்துள்ளது. புதுச்சேரி அருகே கரையைக் கடக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
7 மணி வரை மூடல்: புயல் காரணமாக சென்னை, புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமான ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியிருப்பதால் நண்பகல் 12 மணிவரை இரவு 7 மணி வரை விமானநிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புறநகர் மின்சார ரயில் சேவை குறைப்பு: வங்கக்கடலில் உருவான புயல் சென்னைக்கு நெருக்கமாக வந்திருக்கும் நிலையில், புறநகர் மின்சார ரயில் சேவை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நிலைமை சீரான பின்னர் மீண்டும் ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மணிக்கு 65 - 73 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசுவதால், சென்னை கடற்கரை மற்றும் வேளச்சேரி இடையே MRTS பிரிவில் புறநகர் சேவைகள் நண்பகல் 12.15 மணி முதல் நிறுத்தப்பட்டுள்ளன. பயணிகளின் உதவிகளுக்காக உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு அலுவலகம் (வணிகம்) - 044-25330952, 044-25330953, சென்னை சென்ட்ரல் - 044-25354140 & 22277, எழும்பூர் - 9003161811, தாம்பரம் - 8610459668, செங்கல்பட்டு - 9345962113, பெரம்பலூர் - 9345962147
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அறிவிப்பு: சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அண்மைய அறிவிப்பில், மெட்ரோ ரயில் சேவைகள் எவ்வித தடை, தாமதமும் இன்றி வழக்கம் போல் இயங்குகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக மெட்ரோ ரயில் நிலையப் படிகள், லிஃப்ட்களைப் பயன்படுத்தும்போது பயணிகள் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கோயம்பேடு, செயின்ட் தாமஸ் மவுன்ட், அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் பகுதிகளில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என பயணிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். உதவிக்கு 1860 425 1515 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம், பெண்களுக்கான ஹெல்ப்லைன் 155370 என்று அறிவித்துள்ளது.