

மதுரை: நெருங்கிய உறவினர்கள், நண்பர்களால் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகுவதை தடுக்க கடுமையான சட்டத்தை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கூறியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த பெண் ஒருவர் கணவரின் இறந்த நிலையில், 15 வயது மகளுடன் வசித்து வந்தார். பின்னர் அவர் ரவிச்சந்திரன் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், ரவிச்சந்திரன் அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த சிறுமிக்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமடைந்தார். பின்னர் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ரவிச்சந்திரன் மீது 2019-ல் அறந்தாங்கி போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் ரவிச்சந்திரனை கைது செய்தனர். இந்த வழக்கில் ரவிச்சந்திரனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் 2020-ல் தீர்ப்பளித்தது.
இதை ரத்து செய்யக் கோரி ரவிச்சந்திரன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆர்.பூர்ணிமா அமர்வு பிறப்பித்த உத்தரவு: “சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் பெரும்பாலானவை நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மூலம் நடைபெறுகிறது. தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையில், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் 96 சதவீதம் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களால் நடைபெற்றுள்ளதாகவும், சமூக வலைதளம் மூலம் சிறுமிகளிடம் பழகுபவர்கள், திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகக் கூறப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் சிறுமியின் வலியை விவரிக்க வார்த்தைகளே கிடையாது. உடலில் ஏற்பட்ட காயம் ஆறிவிடும், மனதில் ஏற்பட்ட காயம் வாழ்நாள் முழுவதும் ஆறாது. பாதிக்கப்பட்ட சிறுமிகள் அச்ச உணர்வுடன் இருப்பார்கள், படிப்பில் கவனம் செலுத்த முடியாது. சிறுமிகளின் குணாதிசியம், தனித்துவம் முற்றிலும் மாறிவிடும் என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பாதிக்கப்பட்ட சிறுமிகளை மிரட்டுவதால் அச்சத்துடன் உள்ளனர். பல சம்பவங்களில் சிறுமிகளின் எதிர்காலம் மற்றும் குடும்ப சூழ்நிலை கருதி போலீஸில் புகார் அளிப்பதில்லை. இதனால் குற்றவாளிகள் எளிதில் தப்பிவிடுகின்றனர்.
இதனால் சிறுமிகளுக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்களால் ஏற்படும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க கடுமையான தண்டனை வழங்கும் வகையில் மாநில அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும். பாலியல் வன்கொடுமை தொடர்பாக பள்ளிகளில் விழிப்புணர்வு முகாம் நடத்த வேண்டும். மாணவி விடுதிகளுக்கு குழந்தைகள் நலக்குழுவினர் சென்று பள்ளிகளில் பாலியல் தொந்தரவு உள்ளதா என்பது குறித்து விசாரிக்க வேண்டும். மேலும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 17 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லம் அமைக்க மாநில அரசு நிதி ஒதுக்க வேண்டும். இந்த வழக்கில் மனுதாரரருக்கு வழங்கிய தண்டனையை ரத்து செய்ய முடியாது. மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.