

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்து ஒருசில மணி நேரங்களில் புயலாக வலுப்பெறக்கூடும். இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவ.30) பிற்பகல் காரைக்காலுக்கும் - மாமல்லபுரத்துக்கும் இடையே, புதுச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கக்கூடும், என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: “தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்து ஒருசில மணி நேரங்களில் புயலாக வலுப்பெறக்கூடும். இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவ.30) பிற்பகல் காரைக்காலுக்கும் - மாமல்லபுரத்துக்கும் இடையே, புதுச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கக்கூடும்.
இதன் காரணமாக வடதமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாக மிதமான மழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். இந்த புயல் கரையைக் கடக்கின்றபோது பலத்த காற்றானது மணிக்கு 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 90 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். புயல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தகவல்கள் தெரிவிக்கப்படும்.” இவ்வாறு அவர் கூறினார்.